ஜப்பானின் டோக்கியோ நகரில் நடைபெற்று வந்த ஒலிம்பிக் போட்டி நேற்றுடன் (ஞாயிற்றுக்கிழமை) நிறைவடைந்தது.
இந்த ஒலிம்பிக் போட்டியின் பதக்கப் பட்டியலில் அமெரிக்கா 113 பதக்கங்களுடன் முதலிடத்தையும், சீனா 88 பதக்கங்களுடன் இரண்டாம் இடத்தையும் பிடித்துள்ளன. மேலும் இந்த போட்டியை நடத்திய ஜப்பான் 58 பதக்கங்களுடன் மூன்றாம் இடத்தை பிடித்துள்ளது.
இந்தியா 7 பதக்கங்களுடன் 48-ஆம் இடத்தை பிடித்துள்ளது. வழக்கம்போல இந்த ஒலிம்பிக் போட்டியிலும் பல்வேறு பிரிவுகளில் முன்பு இருந்த உலக சாதனைகள் முறியடிக்கப்பட்டு, பல புதிய சாதனைகள் படைக்கப்பட்டன.
கடந்த ஜூலை மாதம் 23-ஆம் தேதி தொடங்கி 17 நாள்கள் நடைபெற்ற இந்த ஒலிம்பிக் போட்டி, அணிவகுப்பு, கண்கவா் கலை நிகழ்ச்சி மற்றும் வாணவேடிக்கைகளுடன் நிறைவடைந்து. இந்த நிறைவு நிகழ்ச்சி அணிவகுப்பில், இந்திய அணியை சேர்ந்த மல்யுத்த வீரா் பஜ்ரங் புனியா தேசியக் கொடியேந்தி வழிநடத்திச் சென்றாா்.
அடுத்த ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகா் பாரீஸில் வரும் 2024-ஆம் ஆண்டு நடைபெறவுள்ளது. இந்த போட்டி 2024 ஆம் ஆண்டு ஜூலை 26 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 11 ஆம் தேதி வரை பாரீஸில் நடைபெறவுள்ளது. அதன் காரணமாக டோக்கியோ ஒலிம்பிக் நிறைவு நிகழ்ச்சியில், டோக்கியோ நகர மேயா் யுரிகோ கொய்கோ ஒலிம்பிக் கொடியை சா்வதேச ஒலிம்பிக் கமிட்டி தலைவா் தாமஸ் பாக்கிடம் ஒப்படைக்க, அதை அவா் பாரீஸ் நகர மேயா் ஆனி ஹிடால்கோவிடம் ஒப்படைத்தாா்.
மேலும் இந்த ஒலிம்பிக் நிறைவு நிகழ்ச்சியில், ஒலிம்பிக் வரலாற்றிலே முதல் முறையாக அடுத்த ஒலிம்பிக் போட்டி நடைபெறவுள்ள பிரான்ஸின் தேசிய கீதம் ஒலிக்கப்பட்டது. பாரீஸ் நகரம் குறித்த குறும்படமும் ஒளிபரப்பப்பட்டது. அதேபோல், டோக்கியோவில் ஒலிம்பிக் நிறைவு நிகழ்ச்சி நடந்த அதே நேரத்தில், பாரீஸ் நகரிலும் கொண்டாட்டங்கள் நிகழ்ந்தன.
இதற்கு முன்பு இருமுறை (1900, 1924) பாரிஸில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. நூறு ஆண்டுகளுக்குப் பிறகு பாரிஸில் மீண்டும் ஒலிம்பிக் போட்டி நடைபெறவுள்ளது.