3 வருடங்களுக்கு பிறகு வறண்டு காணப்படும் வீராணம் ஏரி

Pradeepa 9 Views
1 Min Read

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள லால்பேட்டையில் வீராணம் ஏரி உள்ளது. இந்த ஏரியின் மொத்த கொள்ளளவு 47.50 அடி, நீளமும் 18 கி.மீ, அகலம் 8 கி.மீ கொண்டது. இந்த ஏரிக்கு வடவாறு வழியாக மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் மற்றும் பருவமழை காலத்தில் பெய்யும் மழையால் நீர்வரத்து அதிகம் இருக்கும்.

வீராணம் ஏரி மூலம் 44,450 ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறுகிறது. அதோடு சென்னை மாநகராட்சியின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது. கடந்த ஆண்டில் ஏற்பட்ட புயல், மழை காரணமாக வீராணம் ஏரி 4 முறை நிரம்பி வழிந்தது. அப்போது ஏரியில் தடுப்புகட்டை கட்டவும், ஏரியை தூர்வார்வதற்காக தண்ணீர் திறந்துவிடப்பட்டது.

இதனால் ஏரியின் நீர்மட்டம் குறைந்து உள்ளதால் தற்போது வீராணம் ஏரி வறண்டு காணப்படுகிறது. 3 வருடங்களுக்கு பிறகு வீராணம் ஏரி வறண்டுபோனதால் அந்த பகுதியில் உள்ள நிலத்தடி நீர்மட்டமும் வேகமாக குறைந்து கொண்டே வருகிறது.

ஏரிக்குள் உள்ள சிறு சிறு குட்டைகளில் மீன்குஞ்சுகள் அதிகம் காணப்படும். தற்போது தண்ணீர் முழுவதும் வற்றிபோனதால் மீன்குஞ்சுகள் அனைத்தும் செத்து மிதந்து காணப்படுகிறது.

கோடைக்கால வெயில் காரணமாக ஏரியின் உள்பகுதி வெடிப்புடன் காணப்படுகிறது. வீராணம் ஏரி வறண்டு காணப்படுவதால் அந்த பகுதியை சுற்றி உள்ள கிராம மக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. எனவே எப்போது மழை பெய்யும் என்று கிராம மக்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

 

Share This Article
Exit mobile version