ஒவ்வொரு ஆண்டும் மே 31ஆம் தேதி உலகின் 193 ஐக்கிய நாடுகளின் உறுப்பு நாடுகளில் புகையிலை எதிர்ப்பு நாள் அனுசரிக்கப்படுகிறது.
புகை பிடிப்பதால் ஏற்படும் தீங்குகளை தடுக்கும் நோக்குடன், 1987ஆம் ஆண்டு உலக சுகாதார அமைப்பால் புகையிலை எதிர்ப்பு நாள் அறிமுகப்படுத்தப்பட்டது. புகையிலை பயன்படுத்துவதை நிறுத்துகிறோம் என உறுதிமொழி எடுப்பதன் நோக்கமாகக் கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
தற்போது உலகம் முழுவதும் கொரோனா கோராதாண்டவம் ஆடி வருகிறது. கொரோனா உலகையே அச்சுறுத்தி வரும் நிலையில், “புகைபிடிப்பவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டால் இவர்கள் உயிரிழப்பதற்கு 50% வாய்ப்புகள் உள்ளது” என உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரஸ் ஆதனோம் தெரிவித்து இருக்கிறார்.
கொரோனாவால் ஏற்படும் ஆபத்தை குறைக்க புகைப்பழக்கத்தை நிறுத்திவிடுவது நல்லது எனக் கூறும் அவர், புகைப்பிடிப்பதனால் ஏற்படும் நுரையீரல் சம்பந்தப்பட்ட நோய்ககளையும், இதய நோய்களையும் தவிர்க்கலாம் என்றும் கூறுகிறார்.
தற்போது ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் புகையிலை பொருட்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீங்குகள் குறித்தும், அதனை கைவிடுவது குறித்தும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் சமூக வலைத்தளங்கள் வாயிலாக நடத்தப்பட்டு வருகிறது.
புகைப்பழக்கத்தால் ஏற்படும் தீங்குகள்
புகையிலை பொருட்களை பயன்படுத்துவதால் ஒவ்வொரு ஆண்டும் 2 பில்லியன் மக்கள் இறக்கின்றனர். இதனை தடுத்து நிறுத்த உலக சுகாதார அமைப்பு முயற்சிகள் மேற்கொண்டு வருவதாக தகவல் தெரிவிக்கின்றன.
புற்றுநோய், மாரடைப்பு உள்ளிட்ட பல நோய்கள் புகைப்பழக்கம் உள்ளவர்களுக்கு ஏற்படுகின்றன.
நுரையீரல் புற்றுநோய், காசநோய் உள்ளிட்ட பல நுரையீரல் தொடர்பான சிக்கல்களுக்கு புகைபிடித்தல் ஏற்கனவே ஆபத்தான காரணியாக அறியப்பட்டுள்ளது.
20 சதவீதத்திற்கும் அதிகமான காசநோய் பாதிப்புகள் புகைப்பழக்கத்தின் விளைவுகளால் ஏற்பட கூடியது.
குழந்தையின்மைக்கு முக்கிய காரணமாக புகைப்பழக்கம் உள்ளது.
தற்போதைய கொரோனா நோய் தொற்றுநோயுடன், புகைபிடிக்கும் பழக்கம் இருப்பவர்களுக்கு இடையே உள்ள தொடர்பு குறித்து ஒரு விவாதம் நடைப்பெற்றது.
அதில் பல வல்லுநர்கள் புகைபிடிப்பவர்களுக்கு கொரோனா வைரஸ் தாக்கம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக கூறுகிறார்கள்.
புகைப்பழக்கத்தை கைவிடுவதால் ஏற்படும் நன்மைகள்
புகைப்பழக்கத்தை கைவிட்ட 20 நிமிடத்தில் இதயத் துடிப்பு மற்றும் ரத்த அழுத்தம் சீராக இயங்க ஆரம்பிக்கிறது. மேலும் 12 மணி நேரத்தில் ரத்தத்தில் கார்பன் மோனாக்சைடு அளவு படிப்படியாக குறைந்து கட்டுப்பாட்டுக்குள் வரும்.
மேலும் புகைப்பழக்கத்தை கைவிட்ட 10 ஆண்டுகளில் நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் ஆபத்து பாதியாகக் குறையும். வாய், தொண்டை, கணைய நோய்கள், சிறுநீர்பை புற்றுநோய் வருவதற்கான ஆபத்துகள் குறைவு.
ஒருமுறை மாரடைப்பு வந்தவர் புகைபிடிப்பதை நிறுத்தினால், இன்னொரு முறை மாரடைப்பு வருதற்கான வாய்ப்புகள் 50 சதவிகிதம் குறைகிறது.
இன்றே புகைப்பழக்கத்தை நிறுத்தினால், எந்த நோய்நொடியும் இல்லாமல் நீண்ட நாட்கள் உயிரோடு வாழலாம்.