கொரோனா தொற்று குழந்தைக்கு வந்தால் செய்ய வேண்டிய சில முதலுதவிகள்!

Selvasanshi 1 View
2 Min Read

பொதுவாக குழந்தைகளுக்கு எதிர்ப்பு சக்தி குறைவாகவே இருக்கும். இதை மனதில் கொண்டு பெற்றோர்கள் குழந்தைகளை எந்தவித நோய் தொற்றும் பாதிக்காதவாறு வளர்க்கவேண்டும். குழந்தைகளுக்கு காய்ச்சல் வந்தால் முதலில் குழந்தையின் வெப்பநிலையையும், பல்ஸ் ஆக்ஸிமீட்டரையும் 6 மணி நேரத்துக்கு ஒருமுறை பரிசோதனை செய்ய வேண்டும். குழந்தைக்கு100 டிகிரிக்கு மேல் காய்ச்சல் இருந்தால் பாரசிட்டமால் மருந்துகள் எவ்வளவு அளவு என்பதை மருத்துவரிடம் கேட்டு அறிந்து சரியான அளவில் கொடுக்க வேண்டும்.

குழந்தைகளுக்கு எளிதில் ஜீரணிக்க கூடிய உணவுகளை, திரவ ஆகாரங்களாக கொடுக்க வேண்டும். இது குளிர்ச்சியாக இல்லாமல் வெதுவெதுப்பாக இருக்க வேண்டும். மேலும் குழந்தைகளை சுத்தமாக, சுகாதாரமாக வைத்து கொள்ளவேண்டும். குழந்தையின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வைட்டமின் சி, ஜிங்க் மருந்துகளை பாதுகாப்பாக கொடுக்கலாம்.

குழந்தைகளுக்கு ஆன்டி பயாடிக் மருந்துகளை கொடுக்கலாமா?

பெரியவர்கள் “அஸித்ரோமைஸின்” என்ற ஆன்டி பயாடிக் மாத்திரையை பயன்படுத்தி வருகிறார்கள். இதை குழந்தைக்கு பயன்படுத்தலாமா? என்று கேட்கலாம். இதுவரை இதற்கு அறிவியல் பூர்வமாக, எந்த ஆதாரமும் இல்லை. அதேபோல் மருத்துவர் ஆலோசனையின்றி நீங்கள் ரெம்டெசிவிர், ஆண்டி பயாடிக் மருந்துகளை குழந்தைக்கு கொடுக்க கூடாது. இது மோசமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும்.

எப்போது மருத்துவரிடம் செல்லவேண்டும் ?

குழந்தைக்கு தொடர்ந்து 4 நாட்கள் காய்ச்சல் அதிகமாக இருந்தால் உடனடியாக மருத்துவரிடம் செல்லவும். குழந்தைக்கு மூச்சுவிடுவதில் சிரமம், தண்ணீர் மற்றும் சாப்பாடு என எதையும் சாப்பிடாமல் இருத்தல், உடலில் ஆக்ஸிஜன் அளவு 95 க்கு கீழ் குறைதல் போன்ற கொரோனா அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.

கொரோனா அறிகுறிகள் இருந்தால் குழந்தை சிறுநீரின் அளவு குறையும், குழந்தை மிகவும் சோர்வாக இருக்கும். இதனால் தாமதிக்காமல் குழந்தைகளை மருத்துவரிடம் அழைத்து செல்லவும்.

கொரோனா பாதித்த குழந்தைக்கு வேறு நோய்க்கான மருந்துகள் கொடுக்கலாமா?

குழந்தைக்கு கொரோனா அறிகுறிகள் இல்லாமல் இருந்தால் நீங்கள் வேறு நோய்க்கான மருந்துகளை கொடுக்கலாம். நீங்கள் கொடுக்கும் மருந்துகளை மருத்துவரிடம் காண்பித்து குழந்தைக்கு கொடுப்பது மிகவும் நல்லது. மருத்துவரிடம் நீங்கள் கொடுக்கும் மருந்துகளில் எதை தவிர்க்கலாம், எதை மாற்றிகொடுக்கலாம் என்பதையும் ஆலோசிக்க வேண்டும்.

நாம் பாதுகாப்பாக இருப்போம், கொரோனாவை தவிர்ப்போம்.

Share This Article
Exit mobile version