கொரோனா வைரஸின் பரவல் அதிகரித்து வரும் காரணமாக, தடுப்பூசி மையங்கள் அனைத்திலும் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை தர வேண்டும் எனவும், சமூக நீதி முன்னேற்றத்துக்கான மையம் இணை நிறுவனர் தொடர்ந்த வழக்கில், மாற்றுத் திறனாளிகளுக்கு தடுப்பூசிபோட வயது வரம்பை நிர்ணிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
மேலும் இந்த வழக்கை தொடர்ந்த மனுதாரர் தரப்பில் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருவதால், மாற்றுத்திறனாளிகளுக்கு வயது வரம்பில் சலுகை வழங்க உத்தரவிட வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டுள்ள நிலையில், சென்னை உயர்நீதிமன்றம் அனைத்து தடுப்பூசி மையங்களிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதனையடுத்து,சென்னை உயர்நீதிமன்றம் 18 வயது முதல் 45 வயதுக்கும் குறைவானவர்களுக்கு தடுப்பூசி செலுத்திக்கொள்வதால் ஏதேனும் பின் விளைவுகள் ஏற்படுமா என மருந்து தயாரிக்கும் நிறுவனத்துடன் கலந்து ஆலோசித்து மாற்றுத்திறனாளிகளுக்கான வயது வரம்பை நிர்ணயித்து மூன்று நாட்களில் முடிவெடுக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதன்தொடர்ச்சியாக அனைத்து தடுப்பூசி மையங்களிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு கவுன்ட்டர்கள் அமைக்க தயாராக உள்ளோம் என்று தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.