கொரோனா வைரஸ் காரணமாக அமலுக்கு வந்த கட்டுப்பாடுகள்

Pradeepa 1 View
1 Min Read

கொரோனா வைரஸ் இரண்டாவது அலையாக மிக வேகமாக பரவி வரும் நிலையில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி நாளை (ஏப்ரல் 8) ஆலோசனை நடத்த உள்ளார். இந்நிலையில் பல்வேறு மாநிலங்கள் தங்களுடைய பகுதிகளில் கடும் கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன.

மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருகிறது. நாள் ஒன்றுக்கு 55 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 300 வரை இறப்பு ஏற்படுகிறது. கொரோனா பரவல் காரணமாக மகாராஷ்டிரா அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது.

தற்போது இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. 144 தடை உத்தரவின் படி 5 பேருக்கு மேல் ஒன்றாக இருக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. வார இறுதி நாளான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்படும். வெள்ளிக்கிழமை இரவு 8 மணி முதல் திங்கள் கிழமை காலை 7 மணி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும்.

விளையாட்டு மைதானங்கள், திரையரங்குகள், மல்டிபிளக்ஸ் தியேட்டர்கள், பூங்காக்கள், உணவு விடுதிகள், மால்கள், மதுபான விடுதிகள் மூடப்பட்டு ஹோம் டெலிவரிக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ரயில், பேருந்து, ஆட்டோ உள்ளிட்ட பொதுப் போக்குவரத்துகள் 50 சதவீத இருக்கை வசதியுடன் இயங்குகின்றன.

அரசு அலுவலகங்கள் 50 சதவீத பணியாளர்களுடன் மட்டுமே செயல்படுகின்றன. தொழிற்சாலைகள், காய்கறி சந்தைகள் போன்றவை கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளுடன் இயங்கும்.

மும்பை மாநகராட்சி கமிஷனர் இக்பால் சகால் ஏப்ரல் 6 ஆம் தேதி வெளியிட்ட உத்தரவில் அனைத்து கடற்கரைகளையும் மூட வேண்டும் என்று கூறியுள்ளார். இதனால் மும்பையில் உள்ள அனைத்து கடற்கரைகளும் ஏப்ரல் 6 ஆம் தேதி மூடப்பட்டன. போலீசார் அங்கு தீவிர பணியில் ஈடுபட்டனர். கடற்கரைக்கு வந்தவர்களை அனைவரையும் போலீஸார் திருப்பி அனுப்பினர்.

Share This Article
Exit mobile version