கொரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக இரண்டு மணிநேரத்திற்கும் குறைவான பயண நேரத்தை கொண்ட உள்நாட்டு விமானங்களில் உணவு வினியோகத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் விமான சேவைகளுக்கு தடை விதிக்கப்பட்டது. பின் மே மாதம் உள்நாட்டு விமான சேவைகளுக்கு மட்டும் சில கொரோனா கட்டுப்பாடுகளுடன் அனுமதி வழங்கப்பட்டது.
சர்வதேச விமானங்களை இயக்க விதிக்கப்பட்ட தடை இதுவரை ‘வாபஸ்’ பெறப்படவில்லை. எனினும் ‘வந்தே பாரத்’ திட்டம் மற்றும் ஒப்பந்தம் அடிப்படையில் வெளிநாடுகளுக்கு இடையே குறைந்த அளவில் சிறப்பு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
மத்திய விமான போக்குவரத்துத் துறை நேற்று வெளியிட்ட அறிக்கையில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரிப்பதன் காரணமாக குறிப்பிட்ட சில உள்நாட்டு விமானங்களில் உணவு வினியோகம் செய்ய தடை விதிக்கப்படுகிறது. அதன்படி இரண்டு மணி நேரத்திற்கும் குறைவான பயண நேரத்தை உடைய விமானங்களில் உணவு வினியோகிக்கக்கூடாது என்று கூறப்பட்டுள்ளது.
இந்த தடை வரும் ஏப்ரல் 15 ஆம் தேதி முதல் அமல் படுத்தப்படும் என்று மத்திய விமான போக்குவரத்து அமைச்சகம் அறிவித்துள்ளது.