சிறு துறைமுகங்களை முறைப்படுத்தும் சட்ட முன் வரவுக்கு எதிர்ப்பு

Pradeepa 1 View
2 Min Read

மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் உள்ள சிறு துறைமுகங்களை முறைப்படுத்த மத்திய அரசு கொண்டு வரவுள்ள சட்ட முன்வரைவு எதிராக குரல் எழுப்ப வேண்டும் என கடலோர மாநிலங்களின் முதலமைச்சர்களை தமிழக முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

குஜராத், மகாராஷ்டிரா கர்நாடகா, கேரளா, ஆந்திரா, ஒடிசா, மேற்கு வங்கம் புதுச்சேரி ஆகிய 9 மாநிலங்களின் முதலமைச்சர்களுக்கு அவர் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். இதுவரை மாநில அரசுகள் நிர்வகித்து நெறிப்படுத்தி வரும் சிறு துறைமுகங்களின் நிர்வாகத்தில் மாற்றம் செய்வது தொடர்பாக இந்திய துறைமுகங்கள் சட்ட முன்வரைவு 2021ஐ மத்திய துறைமுகங்கள் கப்பல் மற்றும் நீர்வளத்துறை அமைச்சகம் உருவாகியுள்ளதாகவும் அதுகுறித்து விவாதிக்க வரும் 24 ஆம் தேதி மாநில அமைச்சர்களின் கூட்டத்துக்கு கடல்சார் மேம்பாட்டு குழுமம் அழைப்பு விடுத்துள்ளதாகவும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

நடைமுறையிலுள்ள 1908 ஆம் ஆண்டில் துறைமுகங்கள் சட்டத்தின்படி சிறு துறைமுகங்களை அமைக்க திட்டமிடுவது மேம்படுத்துவது நெறிப்படுத்துவது கட்டுப்படுத்துவதற்கான அதிகாரம் மாநில அரசுகளிடம் உள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

புதிய சட்ட முன்வரைவு இதில் மாற்றம் செய்து ஆலோசனை தெரிவிக்கும் அமைப்பான கடல் சார் மாநிலங்கள் மேம்பாட்டு குழுமத்திற்கு அதிகாரங்களை மாற்றம் செய்ய உத்தேசித்து உள்ளது. இதன் மூலம் மாநில அரசுகளின் பல அதிகாரங்களை மத்திய அரசு எடுத்து கொள்ளும் என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.

சிறு துறைமுகங்களின் வளர்ச்சிக்கு தற்போது மாநிலங்களின் கட்டுப்பாட்டில் உள்ள உரையே உதவும் என்பதை அனைத்து முதலமைச்சர்களும் ஒப்புக்கொள்வார்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

மத்திய அரசின் புதிய சட்டம் நிறைவேற்றப்பட்டால் சிறு துறைமுகங்களை நிர்வகிப்பதில் மாநில அரசுகளுக்கு எந்தவித முக்கிய பங்கும் இருக்காது என்பதோடு அவற்றின் நிர்வாகத்தில் நீண்ட காலத்துக்கு பாதகமான விளைவுகள் ஏற்படும் என்றும் எச்சரித்துள்ளார்.

சிறு துறைமுகங்களின் நிர்வாகம் மற்றும் நெறிப்படுத்துவதில் மாநிலங்களின் தன்னாட்சி ரீதியான பங்களிப்பை குறைக்கும் நடவடிக்கைகள் தொடர்பான இந்த பிரச்சனையில் மத்திய துறைமுகங்கள் கப்பல் துறை அமைச்சகத்துக்கு கடும் எதிர்ப்பை தமிழக அரசு தெரிவித்திருப்பதாக திரு ஸ்டாலின் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

எனவே கடலோர மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் இந்திய துறைமுகங்கள் சட்ட முன்வரைவு 2021 எதிர்ப்பை தெரிவிக்க வேண்டும் என்றும் மாநிலங்களுக்கு ஏற்கனவே உள்ள அதிகாரங்களை குறைக்கும் எந்த ஒரு நடவடிக்கையும் தடுக்க இணைந்து செயலாற்ற வேண்டும் என்று முன்மொழிவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதுதொடர்பாக கடலோர மாநில அரசுகள் நமக்குள் கருத்துகளைப் பரிமாறிக் கொள்ள வேண்டும் நாளை நடைபெறும் கடல்சார் மாநிலங்கள் மேம்பாட்டு குழு கூட்டத்தில் சட்ட முன்வரைவுக்கு கடும் எதிர்ப்பை தெரிவிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.

Share This Article
Exit mobile version