நடிகர் விவேக் உடல் நலம் பாதிக்கப்பட்டதை குறித்து நடிகர் மன்சூர் அலிகான் பொய்யான தகவலை பரப்பி வருவதாக அவர் மீது காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டு இருக்கிறது.
மாரடைப்பு காரணமாக நடிகர் விவேக் வடபழனியில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டு, அங்கு அவர் சிகிச்சை பலனின்றி ஏப்ரல் 17 அன்று உயிர் இழந்தார்.
நடிகர் விவேக்கிற்கு தடுப்பூசி போட்டுக் கொண்ட மறுநாளே மாரடைப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இது தமிழக மக்கள் அனைவரையும் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.
இந்நிலையில் விவேக் மரணம் குறித்து பேசிய நடிகர் மன்சூர் அலிகான், தடுப்பூசி போட்டு கொண்டதால் தான் நடிகர் விவேக் உடல் நிலை பாதிக்கப்பட்டது என்று குற்றம் சாட்டினார்.
மேலும் அவர் யாரும் முகக்கவசம் அணிய வேண்டாம் என்றும் கூறினார்.
இந்நிலையில் தற்போது நடிகர் மன்சூல் அலிகான் மீது நடவடிக்கை எடுக்குமாறு சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டு இருக்கிறது.
நடிகர் மன்சூல் அலிகான் மீது பிரதமர் மக்கள் நல திட்டங்கள் பிரச்சார விளம்பர அமைப்பின் செயலாளர் சோமு ராஜசேகரன் என்பவர் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்து இருக்கிறார்.
கொரோனா இரண்டாம் கட்ட அலைவீச தொடங்கி தற்போது கொரோனா தொற்று வேகமாக பரவி வரும் நிலையில், அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நேரத்தில் மன்சூர் அலிகான் முகக்கவசம் அணிய வேண்டாம் என்று கூறுவது கண்டிக்கத்தக்கது என்று அந்த புகாரில் தெரிவித்துள்ளார்.
தடுப்பூசி போட்டு கொண்டதால் தான் விவேக்கின் உடல் நிலை சரியில்லாமல் போனதாக மன்சூர் அலிகான் பொய்யான கருத்துகள் பரப்பி வருகிறார் என்றும், இதனால் மக்கள் அச்சமடைய வாய்ப்பு இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். இதனால் மன்சூர் அலிகான் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி இருக்கிறார்.