நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலை கட்டுக்குகடங்காமல் பரவி வந்தது. இந்நிலையில், கொரோனா சிகிச்சை பெறுவதற்கு மருத்துவமனைகளில் இடம் கிடைக்காமல் மக்கள் அவதிப்பட்டு வந்தார்கள். இதற்காக தமிழக அரசு பல இடங்களில் கொரோனா சிறப்பு சிகிச்சை மையங்களை திறந்து வைத்தது. தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சை பெறுவதற்காக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.
அதில், கொரோனா தொற்று பாதித்த நோயாளிகளை மூன்று வகைகளாக பிரித்து சிகிச்சை அளிக்க வேண்டும் என அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா நோய் இருப்பதற்கான அறிகுறிகளுடன் தொற்று உறுதியானவர்களுக்கு, ஆக்சிஜன் அளவு 94 ஆக இருந்தால் அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டிய அவசியமில்லை என்றும், வீடுகளிலேயே அவர்களை தனிமைப்படுத்திக் கொள்ள பரிந்துரை செய்யலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொற்று உறுதியானவர்களுக்கு ஆக்சிஜன் அளவு 94-க்கு கீழாக 90-க்குள் இருந்தால், அவர்கள் ஆரம்ப சுகாதார நிலையங்கள், கொரோனா சிகிச்சை மையங்களில் சிகிச்சை பெற வேண்டும் என அறிவுறுத்தி உள்ளது.
நோய் தொற்று உறுதியானவர்களுக்கு ஆக்சிஜன் அளவு 90-க்கு கீழாக இருப்பது கண்டறியப்பட்டால், அவர்களை உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளது.