கொரோனா நோய் தொற்றின் இரண்டாம் அலையின் தீவிரத்தை கட்டுப்படுத்த, தமிழகத்தில் தற்போது தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த தளர்வுகளற்ற முழு ஊரடங்கு நாளை மறுதினம் காலையுடன் முடிவடையும் நிலையில், ஜூன் 7-ம் தேதி முதல் ஜூன் 14-ம் தேதி வரை தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இந்த அறிவிப்பில், கொரோனா நோய் தொற்று பாதிப்பு அதிகமுள்ள மாவட்டங்களில் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டும், கொரோனா நோய் தொற்று பாதிப்பு குறைந்த மாவட்டங்களில் சில தளர்வுகள் அளிக்கப்பட்டும் உத்தரவிடப்பட்டுள்ளது.
கொரோனா நோய் தொற்று அதிகமுள்ள 11 மாவட்டங்களுக்கு வழங்கப்பட்டுள்ள தளர்வுகளும் கட்டுப்பாடுகளும்:
கோயம்புத்தூர், நீலகிரி, ஈரோடு, சேலம், திருப்பூர், கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய 11 மாவட்டங்களில் கொரோனா நோய் தொற்று பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த மாவட்டங்களில், கொரோனா நோய் தொற்றை கட்டுக்குள் கொண்டுவருவதற்காகவும், பொது மக்களின் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்யும் விதமாகவும் அத்தியாவசிய பணிகளுடன் சில தளர்வுகளையும் தமிழக அரசு அறிவித்துள்ளது.
- தனியாக இயங்குகின்ற மளிகை, பலசரக்கு கடைகள், இறைச்சி மற்றும் மீன் விற்பனை செய்யும் கடைகள், பூ, காய், பழங்கள் விற்பனை செய்யும் நடைபாதை கடைகள் இயங்க காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மீன் கடைகள், இறைச்சிக் கடைகள் மொத்த விற்பனைக்காக மட்டும் செயல்பட அனுமதி.
- அனைத்து அரசு அலுவலகங்களும் 30% பணியாளர்களுடன் செயல்பட அனுமதி.
- தீப்பெட்டி தொழிற்சாலைகள் 50 சதவீத பணியாளர்களுடன் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
- சார்பதிவாளர் அலுவலகங்கலில் நாளொன்றுக்கு 50 டோக்கன்கள் மட்டும் வழங்கப்பட்டு, பத்திரப் பதிவுகளை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கொரோனா நோய் தொற்று பாதிப்பு குறைந்துள்ள மாவட்டங்களுக்கு வழங்கப்பட்டுள்ள தளர்வுகளும் கட்டுப்பாடுகளும் :
- தனியார் பாதுகாப்பு சேவை நிறுவனங்கள், அலுவலகங்கள், வீடுகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடு பராமரிப்பு உள்ளிட்ட சேவைகள் செய்ய இ-பாஸ் உடன் அனுமதி.
- மின் பணியாளர்கள், கணினி பழுதுபார்ப்பவர்கள், மோட்டார் பழுதுபார்ப்பவர்கள், பிளம்பர்கள், தச்சர், போன்ற சுய தொழில் வேலை செய்பவர்கள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை இ-பதிவுடன் செயல்படலாம்.
- ஸ்விட்ஸ்கள், ஒயர்கள், பல்புகள் போன்ற மின் பொருள்கள் விற்பனை செய்யும் கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதி.
- இரு சக்கர வாகன பழுது நீக்கும் கடைகள் செயல்பட அனுமதி. மேலும் வாகனங்களின் உதிரி பாகங்கள் விற்பனை செய்யும் கடைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
- கல்விப் புத்தகங்கள்,எழுதுப் பொருள்கள் விற்பனை செய்யும் கடைகளுக்கு மாலை 5 மணி வரை மட்டும் செயல்பட அனுமதி.
- வாடகை வாகனங்கள், டேக்ஸிகள் மற்றும் ஆட்டோக்களில் பயணிக்க இ-பதிவுடன் அனுமதி. டேக்ஸிகளில் ஓட்டுநர் தவிர மூன்று பேர் பயணிக்கலாம். ஆட்டோக்களில் ஓட்டுநர் தவிர 2 பேர் பயணிக்கலாம்.
மாநிலம் முழுவதுமுள்ள பொதுவான கட்டுப்பாடுகள்:
- ஊட்டி, கொடைக்கானல், ஏலகிரி, குற்றாலம், ஏற்காடு ஆகிய பகுதிகளுக்கு அவசர காரணங்களுக்கு இ-பாஸ் பெற்று பயணிக்கலாம்.
- மாநிலம் முழுவதும் உள்ள பொதுப் போக்குவரத்துக்கு தடை நீடிக்கிறது.
- மதுரை, கோவை, திருச்சி, சேலம், நாமக்கல், கரூர், திருப்பூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் உள்ள ஏற்றுமதி மற்றும் ஏற்றுமதிக்கான இடுபொருள் தயாரிக்கும் நிறுவனங்கள் 10 % பணியாள்களுடன் அத்தியாவசிய பயன்பாட்டிற்காக செயல்பட அனுமதி.
- நடமாடும் வாகனங்கள் மூலம் காய்கறி, பழங்கள் விற்பனை செய்யப்படும் பணிகள் தொடரும்.
மேலும், பொது மக்கள் அவசியமில்லாமல் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் எனவும், அரசின் இந்த நோய் தடுப்பு முயற்சிகளுக்கு ஆதரவும், ஒத்துழைப்பும் தருமாறு முதலமைச்சர் ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.