நாட்டுப்பற்று, தன்னலமின்மை, அஞ்சாமை, எளிமை, கடுமையான உழைப்பு, நேர்மை ஆகியவற்றின் இமயமாக திகழ்ந்து, தாய் நாட்டின் வளர்ச்சிக்கு பணி செய்வதற்காக தனது வாழ்நாள் முழுவதையும் ஒப்படைத்த தியாகத்தின் ஒளிவிளக்கு தான் நமது பெருந்தலைவர் காமராஜர்.
Contents
பிறப்பு :இளமையும், விடுதலைப் போராட்ட ஈடுபாடும் :திருவனந்தபுரம் சென்ற காமராஜர் :அரசியல் துறவி :விடுதலைப் போராட்டத்தில் காமராஜரின் பங்கு :சத்தியமூர்த்தியின் சீடர் :வெள்ளையனே வெளியேறு :முதலமைச்சர் காமராஜர் :காமராஜரின் வளர்ச்சி திட்டங்கள் :காமராஜர் திட்டம் :கிங் மேக்கர் :நாகர்கோவில் தொகுதியில் வெற்றி :மறைவு :
பிறப்பு :
- அப்போதைய ராமநாதபுரம் மாவட்டத்தில் விருதுப்பட்டி என்ற ஊரில் 1903ஆம் ஆண்டு ஜூலை 15ஆம் தேதி காமராஜர் பிறந்தார். தற்போது அந்த ஊர் விருதுநகர் என்ற நகரமாகத் விளங்குகிறது. இவரது தந்தையின் பெயர் குமாரசாமி நாடார் மற்றும் இவரது தாயாரின் பெயர் சிவகாமி அம்மையார் ஆகும். காமராஜரின் சிறு வயதிலேயே அவரது தந்தை காலமாகிவிட்டார். இதனால் காமராஜர் தனது தாய்மாமா கருப்பையா நாடாரின் பராமரிப்பிலேயே வளர்ந்து வந்தார்.
இளமையும், விடுதலைப் போராட்ட ஈடுபாடும் :
- காமராஜர் குடும்ப சூழல் காரணமாக தனது ஆறாம் வகுப்பிலேயே பள்ளிப் படிப்பை நிறுத்திவிட்டார். பின்னர் அவரது மாமா கருப்பையா நாடார் நடத்திவந்த துணிக்கடையில் பணி செய்து வந்தார். துணிக்கடையில் வேலை பார்க்கும் போதே செய்தித்தாள்களை படிக்கும் பழக்கம் காமராஜருக்கு ஏற்பட்டது. இதனால் விடுதலை போராட்டத்திலும், அரசியலிலும் காமராஜருக்கு இளம்வயதிலேயே ஈடுபாடு அதிகரித்தது. அருகில் நடக்கும் அனைத்து விடுதலை இயக்க கூட்டங்களுக்கும் தவறாமல் சென்று விடுவார். பி. வரதராஜுலு நாயுடு, திரு.வி.கல்யாண சுந்தரனார், சத்தியமூர்த்தி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்களின் சொற்பொழிவுகள் அவரை மேலும் விடுதலைப் போராட்டத்தின் மீது ஈர்த்தன. இந்திய தேசிய காங்கிரஸில் இணைந்து விடுதலைப் போராட்டத்தில் தீவிரமாக ஈடுபடத் தொடங்கினார் காமராஜர்.
திருவனந்தபுரம் சென்ற காமராஜர் :
- ஆனால் காமராஜர் விடுதலை இயக்கத்தில் ஈடுபடுவதை அவரது குடும்பத்தினர் விரும்பவில்லை. எனவே அவரை திருவனந்தபுரத்திற்கு அனுப்பி வைத்தனர். திருவனந்தபுரத்தில் அவரது இன்னொரு தாய்மாமா வைத்திருந்த காய்கறி கடையில் பணிபுரிந்தார் காமராஜர். அங்கேயும் அவரது விடுதலை போராட்ட ஈடுபாட்டை காமராஜர் குறைத்துக் கொள்ளவில்லை. கேரளாவில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ஆதரவாக நடைபெற்ற வைக்கம் சத்தியாகிரக போராட்டத்திற்கு காந்தியடிகள் வருகை தந்து போராட்டத்தை வெற்றி பெறச் செய்தார். அந்த போராட்டத்தில் காமராஜரும் பங்கு கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
அரசியல் துறவி :
- விருதுநகரில் அவரது குடும்பம் மிகவும் வறுமை நிலையில் இருந்ததை அறிந்த காமராஜர் மீண்டும் திருவனந்தபுரத்திலிருந்து விருதுநகருக்கு வந்து சேர்ந்தார். குடும்பத்தினர் அவரை திருமணம் செய்து கொள்ளுமாறு வலியுறுத்தியும், காமராஜர் அதனை முற்றிலுமாக மறுத்துவிட்டார். இந்திய நாடு விடுதலை பெறும் வரையில் தான் திருமணம் செய்து கொள்ளப் போவதில்லை என்பதனை அவர்களிடம் தெரிவித்து முழுநேரமாக தேச விடுதலை போராட்டத்திலேயே தன்னை இணைத்துக் கொண்டார். நாட்டிற்கு விடுதலை கிடைத்த பிறகும் கூட அவர் திருமணம் செய்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
விடுதலைப் போராட்டத்தில் காமராஜரின் பங்கு :
- சென்னை மவுண்ட் ரோடில் இருந்த வெள்ளைக்காரன் நீல் சிலையை அப்புறப்படுத்த ஒரு கிளர்ச்சி நடந்தது. காமராஜர் ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து ஒரு பெரிய தொண்டர் படையைத் திரட்டிக் கொண்டு சென்னை வந்து காந்தியடிகளை சந்தித்தார். காங்கிரஸ் மாநாட்டில் அந்த சிலையை அகற்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது .பின்னர் நீல் சிலை அகற்றப்பட்டது.
- 1930ஆம் ஆண்டு நடந்த வேதாரண்யம் உப்பு சத்தியாகிரகத்தில் காமராஜர் பங்கு வகித்தார். இதனால் 2 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்தார் காமராஜர். பின்னர் காந்தி – இர்வின் ஒப்பந்தம் கையெழுத்தானதை தொடர்ந்து அவர் விடுதலை செய்யப்பட்டார். பிறகு மீண்டும் காமராஜர் கைது செய்யப்பட்டு ஒரு வருடம் சிறையில் அடைக்கப்பட்டார்.
சத்தியமூர்த்தியின் சீடர் :
- நாட்டுப்பற்று மிகுந்த காமராஜர் சத்தியமூர்த்தியின் சீடராக திகழ்ந்தார். காமராஜரின் கருத்தாழமும், சிந்தனைத் தெளிவும், செயலாற்றும் திறனும் சத்தியமூர்த்தியை பெரிதும் ஈர்த்தன. சத்தியமூர்த்தியின் உற்ற தோழனாகவே காமராஜர் விளங்கினார். 1954 ஆம் ஆண்டு காமராஜர் தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்ற தினத்தில் முதன் முதலில் சத்தியமூர்த்தியின் இல்லத்திற்கு சென்று அவரது மனைவியாரை வணங்கி வாழ்த்துக்களை பெற்றார். இந்த சம்பவமே சத்தியமூர்த்தி அவர்கள் மீது காமராஜர் கொண்டிருந்த மரியாதையும், அன்பையும் எடுத்துரைக்கிறது. 1936 ஆம் ஆண்டு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக சத்தியமூர்த்தி தேர்ந்தெடுக்கப்பட்ட போது அவரது செயலாளராக காமராஜர் தான் பணியாற்றினார். 1940 ஆம் ஆண்டில் காங்கிரஸ் தலைவராக காமராஜர் தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போது சத்தியமூர்த்தி இவருக்கு செயலாளராக பொறுப்பேற்றார்.
வெள்ளையனே வெளியேறு :
- இப்படி தமிழ்நாட்டில் பெரிதும் பேசப்பட்ட அவரது பெயர் படிப்படியாக வளர்ந்து அனைத்திந்திய அளவில் பேசப்படும் அளவுக்கு தேசிய அளவில் முக்கிய தலைவராக உயர்ந்தார் காமராஜர். 1937ஆம் ஆண்டு சென்னை மாநில சட்டமன்றத் தேர்தலில் விருதுநகர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றியும் பெற்றார் காமராஜர். 1942ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் “வெள்ளையனே வெளியேறு” என்ற இயக்கம் தேசம் முழுவதும் காட்டுத் தீ போல வேகமாக பரவியது. ஆங்கிலேயரிடம் சிக்காமல் தமிழ்நாட்டில் பல பகுதிகளுக்கும் சென்று தொண்டர்களை ஆங்கிலேயருக்கு எதிராக கிளர்ந்து எழச் செய்தார் காமராஜர். இதனால் 1942ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார் அவர். பிறகு 1945 ஆம் ஆண்டு விடுதலையானார்.
முதலமைச்சர் காமராஜர் :
- 1947 ஆம் ஆண்டு இந்தியா விடுதலை அடைந்ததும் நடந்த முதல் பொதுத் தேர்தலில் காமராஜர் நாடாளுமன்றத்திற்கு போட்டியிட்டு வெற்றி பெற்றார். 1954ஆம் ஆண்டு முதல் அமைச்சராக இருந்த மூதறிஞர் ராஜாஜி பதவியில் இருந்து விலகியதும் காமராஜர் 1954ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 13 ஆம் தேதி அன்று தமிழ் நாட்டின் முதலமைச்சராக பதவியேற்றார். அடுத்த இரண்டு தேர்தல்களிலும் மக்களின் பேராதரவுடன் காமராஜரின் அமைச்சரவை தொடர்ந்து நீடித்தது.
காமராஜரின் வளர்ச்சி திட்டங்கள் :
- முதல் அமைச்சராக இருந்தபோது காமராஜர் கல்வி தொழில் பொருளாதாரம் விவசாயம் ஆகிய துறைகளில் தமிழ்நாட்டை உச்சம் தொட வைத்தார். மற்ற மாநிலங்களுக்கு தமிழ்நாடு முன்மாதிரியாகத் திகழ்ந்தது. படிக்காத மேதை என்று போற்றப்படும் காமராஜர் ஏழை எளியோர் என அனைத்து தரப்பு குழந்தைகளும் கல்விச் செல்வத்தை பெற வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். இதனால் கல்வியை வளர்க்க பல்வேறு திட்டங்களை கொண்டு வந்தார் காமராஜர். ஏராளமான புதிய பள்ளிகள் தமிழ்நாடு முழுவதிலும் திறக்கப்பட்டன. மதிய உணவுத் திட்டம், மாணவர்களுக்கு சீருடை திட்டம், எஸ்எஸ்எல்சி வகுப்பு வரையில் இலவச கல்வி திட்டம் ஆகிய அற்புதமான கல்வி வளர்ச்சி திட்டங்கள் பலவற்றை கொண்டு வந்து ஏழை குடும்பங்களை சேர்ந்த மாணவர்களையும் பள்ளிக்கூடங்களை நோக்கி இழுத்தார் காமராஜர். இதனாலேயே இன்று வரையிலும் தமிழ்நாட்டில் கல்வி கண் திறந்த காமராஜர் என்ற புகழ் அவருக்கு நிலைத்து நிற்கிறது.
- மின்சாரத் துறையில் வியக்கத்தக்க வளர்ச்சியை தமிழ்நாட்டில் நிகழ்த்திக் காட்டினார் காமராஜர். ஏராளமான கிராமங்களிலும் மின்சார வசதி இவரால் அளிக்கப்பட்டது. குடிநீர் வசதிகளும் பெருக்கப் பட்டது. பல புதிய சாலைகள் போடப்பட்டன, மருத்துவ துறையிலும் பல வளர்ச்சித் திட்டங்கள் கொண்டுவரப்பட்டன. மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் அனைத்து நலத்திட்டங்களும் காமராஜரால் செயல்படுத்தப்பட்டன. அவரது ஆட்சிக் காலத்தில் அனைத்து துறைகளிலும் தமிழ்நாடு வளர்ச்சி பெற்று முன்னோடியாகத் திகழ்ந்தது. காமராஜரின் பெரும் ஆற்றலை ஜவர்கலால் நேரு பெரிதும் போற்றினார். 1961ஆம் ஆண்டு அக்டோபர் 9ஆம் தேதி சென்னையில் காமராஜரின் சிலை ஒன்றை திறந்து வைத்தார்.
காமராஜர் திட்டம் :
- பதவிகளில் இருக்கும் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் பதவிகளை இராஜினாமா செய்துவிட்டு மக்களிடம் நேரடியாகச் சென்று பழகி இயக்கத்தை வளர்க்க வேண்டும் என்ற நோக்கத்துடன் 1963 ஆம் ஆண்டு காமராஜர் ஒரு புதிய திட்டத்தை பிரதமர் ஜவகர்லால் நேருவிடம் வழங்கினார். அந்தத் திட்டமே காமராஜர் திட்டம் என்று அழைக்கப்படுகிறது. அந்தத் திட்டத்தின்படி 1963ஆம் ஆண்டு அக்டோபர் இரண்டாம் தேதி காமராஜர் தனது பதவியிலிருந்து ராஜினாமா செய்து கட்சியை வளர்க்கும் பணிகளில் ஈடுபட்டார்.
கிங் மேக்கர் :
- 1964ஆம் ஆண்டு மே மாதம் 21 ஆம் தேதி பிரதமராக இருந்த ஜவர்கலால் நேரு மறைந்தார். இதன் பிறகு அடுத்த பிரதமர் யார் என்பதை முடிவு செய்யும் பொறுப்பு காமராஜருக்கு இருந்தது. லால் பகதூர் சாஸ்திரியை பிரதமராக்கினார் காமராஜர். ரஷ்யா நாட்டுக்கு பயணம் சென்றிருந்த லால் பகதூர் சாஸ்திரி எதிர்பாராதவிதமாக 1966ஆம் ஆண்டு ஜனவரி 10 ஆம் தேதி காலமானார். மீண்டும் அடுத்த பிரதமர் யார் என்பதை முடிவு செய்யும் பொறுப்பு காமராஜரிடம் இருந்தது. பல முக்கிய காங்கிரஸ் தலைவர்கள் காமராஜரை பிரதமராக வேண்டும் என்று விரும்பினார். ஆனால் காமராஜர் அதை விரும்பவில்லை. இந்திரா காந்தி அம்மையாரை பிரதமர் ஆக்கினார். இதனாலேயே ‘கிங் மேக்கர்’ என்ற பெயரால் பெருந்தலைவர் காமராஜர் போற்றப்படுகிறார்.
நாகர்கோவில் தொகுதியில் வெற்றி :
- 1976ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் விருதுநகர் தொகுதியில் காமராஜர் வெற்றி பெற முடியவில்லை. இருப்பினும் தனது அரசியல் பணிகளை தொடர்ந்து செய்து வந்தார் அவர். நாகர்கோவில் நாடாளுமன்ற தொகுதியில் நடந்த இடைத்தேர்தலில் பின்னர் 1971ம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலிலும் போட்டியிட்டு நாகர்கோவில் மக்களின் பெரும் ஆதரவுடன் மீண்டும் வெற்றி பெற்றார் கர்மவீரர் காமராஜர்.
மறைவு :
- தனக்கென்று எந்தவித சொத்தையும் சேர்க்காமல், தன் வீடு, குடும்பம் ஆகியவற்றைக் கூட பார்க்காமல் தன் வாழ்நாள் முழுவதையும் மக்களுக்கு பணி செய்வதிலேயே அர்ப்பணித்த கர்மவீரர் காமராஜர் 1975-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 2 ஆம் தேதி அன்று மண்ணுலகை விட்டு பிரிந்து சென்றார். இந்த செய்தியறிந்த அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி சென்னைக்கு வந்து காமராஜரின் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்றார். எண்ணற்ற பல வளர்ச்சித் திட்டங்களை கொண்டு வந்து மக்களின் வாழ்வை மேம்படுத்தி கல்விக் கண்ணைத் திறந்த படிக்காத மேதை காமராஜர் மறைந்தாலும் என்றென்றும் அவரது பெருமையும், புகழும் மக்கள் மனதில் இருந்து மறையாது என்று சொன்னால் அது மிகையல்ல! பெருந்தலைவர் காமராஜரின் வாழ்க்கையை எடுத்துக்காட்டாக எடுத்துக்கொண்டு நாமும் நமது வாழ்வில் சேவை மனப்பான்மையோடு வாழ வேண்டும் என்று உறுதி ஏற்போம்.