கடை எழு வள்ளல் kadai ezhu vallal

sowmiya p 6 Views
3 Min Read

சங்க கால இலக்கியமான பத்துப்பாட்டில் மூன்றாம் பாடல் சிறுபாணாற்றுப் படை ஆகும். இந்தச் சிறுபாணாற்றுப் படையைப் பாடிய நல்லூர் நத்தத்தனார், ஏழு வள்ளல்கள் பற்றியும் அவர்களின் ஈகை செயல்கள் பற்றியும் பாடியுள்ளார். இவர்களின் கொடைமடம் செயல்களே அவ் வள்ளல்களுக்குச் சிறப்பைச் சேர்த்தன என்பதும் உண்மையாகும். இந்த வள்ளல்களைப் பற்றிய செய்திகளை எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றான புறநானூற்றுப் பாடல்களும் கூறுகின்றன. கொடைமடம் என்றால் சற்றும் யோசித்து பாராமல் பகுத்தறியாது மடமையோடு கொடை செய்வது ஆகும்.

1. பேகன்

  • பொதினி (பழனி) மலைக்குத் தலைவர். மழை வளம் மிக்க அம்மலையின் காட்டில் மயில்கள் திரிந்து கொண்டிருக்கும். ஒருநாள் அப்படித் திரிந்து கொண்டிருந்த ஒரு மயில் அகவியதைக் கேட்டு, அது குளிரால் நடுங்கி அகவியது என்று நினைத்தார். அவரகத்தே அருள் உணர்ச்சி பெருகவே, தமது போர்வையை அம்மயிலுக்குப் போர்த்தினார். மயில் போர்வையைப் பயன்படுத்திக் கொள்ளுமா? கொள்ளாதா? எனச் சிறிதும் எண்ணிப் பாராமல் இத்தகைய செயல் செய்தார்.இதனையே ‘கொடைமடம்’ எனச் சான்றோர் போற்றிக் கூறினர்.

2. பாரி

பறம்பு மலையை ஆண்ட குறுநில மன்னர். வேள்பாரி என்றும் வழங்கப்படுகிறார். இவர், தாம் சென்ற வழியில், தம் தேரைத் தடுத்த முல்லைக் கொடி, தேரை விரும்பியதாகக் கருதி, அது படர்வதற்குத் தனது பெரிய தேரையே அளித்தார்.

கபிலர் பாடியது,
பாரி பாரி’ என்று பல ஏத்தி,
ஒருவற் புகழ்வர், செந் நாப் புலவர்;
பாரி ஒருவனும் அல்லன்;
மாரியும் உண்டு, ஈண்டு உலகு புரப்பதுவே.
(புறம் 107)

  • ஒரு புலவர் பாரி பாரி என்று சொல்லி அவனை மட்டுமே புகழ்ந்துகொண்டிருக்கிறார். பாரி ஒருவன் மட்டுந்தானா கொடையாளி? மழையும் இருக்கிறதே. அதாவது மழைபோல் வேள் பாரி கொடை வழங்குபவன் என்பது பொருள்.

3. மலையமான் திருமுடிக் காரி

  • ஒலிக்கும் மணியைக் கழுத்திலும் ஆடுகின்ற அழகிய ‘தலையாட்டம்’ என்ற அணியைத் தலையிலும் அணிந்த குதிரையையும் ஏனைய செல்வங்களையும் இனிய மொழிகளுடன் இரவலர்க்கு இல்லை என்னாது அளித்தார்.

4. ஆய்

ஒளி பொருந்திய நீல நிறமுள்ள நச்சரவம் ஒன்று இவருக்கு ஓர் அரிய ஆடையை அளித்ததாம். நாகம் நல்கிய ஒளிமிக்க ஆடையை இவர், ஆலமரத்தின் கீழிருந்த செல்வராகிய சிவபெருமானுக்கு அளித்தாராம்!

உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் பாடியது.

களங்கனி அன்ன கருங் கோட்டுச் சீறியாழ்ப்
பாடு இன் பனுவல் பாணர் உய்த்தென,
களிறு இலவாகிய புல் அரை நெடு வெளில்,
கான மஞ்ஞை கணனொடு சேப்ப,
ஈகை அரிய இழை அணி மகளிரொடு
சாயின்று’ என்ப, ஆஅய் கோயில்;
சுவைக்கு இனிது ஆகிய குய்யுடை அடிசில்
பிறர்க்கு ஈவு இன்றித் தம் வயிறு அருத்தி,
உரைசால் ஓங்கு புகழ் ஒரீஇய
முரைசு கெழு செல்வர் நகர் போலாதே
(புறம் 127)

உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் பாடியது

மன்றப் பலவின் மாச் சினை மந்தி
இரவலர் நாற்றிய விசி கூடு முழவின்
பாடு இன் தெண் கண், கனி செத்து, அடிப்பின்,
அன்னச் சேவல் மாறு எழுந்து ஆலும்,
கழல் தொடி ஆஅய் மழை தவழ் பொதியில் 5
ஆடுமகள் குறுகின் அல்லது,
பீடு கெழு மன்னர் குறுகலோ அரிதே.
(புறம் 128)

ஆய் மன்னனைப் பாடிக்கொண்டு அவன் அரண்மனை செல்லும் இரவலர் (கொடை கேட்டு செல்பவர்) தம் முழவினை (முரசு) முழக்குவர். பின்னர் முழவினை பொதியமலையில் இருக்கும் பலா மரத்தின் கிளைகளில் தொங்க விடுவர் இரவலர் முழக்கும்போது பார்த்த பெண்குரங்கு அந்த முழவினைப் பலாப் பழத்தைத் தட்டிப் பார்ப்பது போலத் தட்டும். அந்த ஓசையைக் கேட்டு அங்குள்ள நீர்க்கரையில் அன்னச் சேவல் எழுந்து குதித்து ஆடும்.

5. அதியமான்

  • இவர் ஒருகால் தன் நாட்டு மலையொன்றின் உச்சிப் பிளவின் சரிவில் நின்ற அருநெல்லி மரத்தின் அருங்கனி ஒன்றைப் பெற்றார். அக்கனி, தன்னை உண்டாரை நரை, திரை, மூப்பு இன்றி நீண்ட நாள் வாழ வைக்கும் வலியுடையது. அக்கனியைத் தாமே உண்ணாமல் வைத்திருந்து தம்மைக் காண வந்த நல்லிசைப் புலமை சான்ற ஒளவையார்க்கு ஈந்து அழியா அறப்புகழ் பெற்றார்.

6. நள்ளி

  • இவரை நளிமலை நாடன் என்றும், கண்டீரக் கோப்பெரு நள்ளி என்றும், பெரு நள்ளி என்றும் வழங்கினர்.

7. ஓரி

  • இவர் விற்போரில் வல்லவராதலின், இவ் வள்ளலை “வல்வில் ஓரி” என்றும் அழைப்பர்.கொல்லிமலை கலைஞர்களுக்கு தனது நாட்டை பரிசளித்தார்.
Share This Article
Exit mobile version