ஜெய் பீம் திரைப்படம் – ரியல் ஹீரோவின் கதை

Pradeepa 7 Views
2 Min Read

ஜெய் பீம் என்ற சக்திவாய்ந்த முழக்கத்தை பெயராக கொண்டுள்ள இந்த படத்தின் கதைக்களம் என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே எழுந்துள்ளது. ஜெய் பீம் படம் உண்மை கதை ஒன்றை தழுவி எடுக்கப்படுவதாக இயக்குனர்தான் தா.சே.ஞானவேல் தெரிவித்துள்ளார்.

சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி கே.சந்துரு கதாபாத்திரத்தில் சூர்யா நடிக்க இருக்கிறார். மனித உரிமைகளுக்காக போராடும் போராளியாக வழக்கறிஞர் சந்துரு எடுத்துக்கொண்ட வழக்கு ஒன்றை தழுவியே ஜெய் பீம் கதை உருவாக்கப்பட்டுள்ளது.

காவல்துறையின் பொய் வழக்கில் சிக்க வைக்கபட்ட கடலூர் மாவட்டத்தில் இருளர் இனத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் விசாரணை கைதியாக சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்படுகிறார். அவரது மரணத்திற்கு நீதி கேட்க யாரிடம் செல்வது என்றுகூட அறியாத பாதிக்கப்பட்ட பெண் மற்றும் அவரது உறவினர்கள் 1993ஆம் ஆண்டு வழக்கறிஞர் ஆக இருந்த சந்துருவை சந்தித்து முறையிடுகின்றனர்.

அதிகார வர்க்கத்தால் பாதிக்கப்பட்டு நிர்க்கதியாக நிற்கும் பழங்குடியின பெண்ணுக்காக சட்டத்தை ஆயுதமாக கையில் எடுக்கிறார் சந்துரு. அவர்களுக்காக சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒன்றரை ஆண்டு காலம் சட்டப் போராட்டம் நடத்தி அத்துமீறிய போலீசாருக்கு தண்டனை பெற்றுத் தந்தார்.

கடந்த ஆண்டு வெளியாகி பிரம்மாண்டமான வெற்றியைப் பெற்ற சூரரைப்போற்று திரைப்படமும் உண்மை கதையை தழுவி எடுக்கப்பட்ட ஒன்றுதான். வானம் என்ன உங்க அப்பன் வீட்டு சொத்தா என்ற ஒற்றை வசனம் மூலம் அந்தப் படத்தில் சமூகநீதி பேசியிருப்பார் சூர்யா. விமான சேவை என்பது உழைக்கும் அடித்தட்டு வர்க்கத்திற்கும் எளிதில் கிடைக்க வேண்டும் என்ற கொள்கையைக் கொண்ட நெடுமாறன் கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருப்பார் நடிகர் சூர்யா.

இன்று அடுத்த கட்டத்திற்குச் சென்று சட்டமும் நீதியும் அனைவருக்கும் ஆனதாக இருக்க வேண்டும் என்ற கருவை மையமாக கொண்ட ஜெய் பீம் படத்தில் நடித்து வருகிறார். சினிமா மூலம் கிடைத்த பணத்தையும் புகழையும் கொண்டு சுய நலத்துடன் இருக்காமல் ‘அகரம்’ என்ற அறக்கட்டளையை தொடங்கி பல ஏழை எளிய மாணவர்களின் கல்விக்கு உதவி வருகிறார் சூர்யா.

அத்துடன் மட்டும் நின்றுவிடாமல் ஒன்றிய அரசின் நீட்தேர்வு புதிய கல்விக் கொள்கையால் ஏழை மாணவர்களின் கல்வி பறிபோகும் என்பதை உணர்ந்து அதற்கு எதிராக வலுவான எதிர்ப்புக்களையும் பதிவுசெய்தார். அரசுகளை விமர்சித்தால் திரையுலகில் பாதிப்பு வரும் வருமான வரித்துறை சோதனை வரும் என அஞ்சாமல் எதையும் துணிச்சலாக பேசி ரியல் ஹீரோவாக உயர்ந்து நிற்கிறார் நடிகர் சூர்யா.

நீட்தேர்வு அநீதியானது மனுநீதி தேர்வு என காட்டமாக தெரிவித்த சூர்யா வீடியோ கான்பரன்சில் தீர்ப்பு வழங்கும் நீதிமன்றம் மாணவர்களை அச்சமின்றி தேர்வு எழுதச் சொல்கிறது என நீதிமன்றத்தையும் விமர்சித்தார். இந்த கருத்துக்காக சூர்யா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிபதி எஸ்.எம் சுப்பிரமணியம் தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுத சூர்யாவுக்கு ஆதரவாக தலைமை நீதிபதிக்கு எதிராக களத்திற்கு வந்தவர்தான் கே.சந்துரு. இன்று அவரது கதாபாத்திரத்தையே நடிகர் சூர்யா பிரதிபலிக்க இருக்கிறார் என்பது கூடுதல் சுவாரசியம்.

Share This Article
Exit mobile version