இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் மனிதனை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தின் முதல் கட்டமாக ஆளில்லா விண்கலத்தை டிசம்பர் மாதத்திற்குள் அனுப்ப முயற்சித்து வருகிறது. இருப்பினும் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை இந்த திட்டத்தை வெகுவாக பாதித்துள்ளதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
விண்வெளிக்கு மனிதனை அனுப்பும் ககன்யான் திட்டம் பிரதமர் நரேந்திர மோடியால் கடந்த 2018-ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. தற்போது விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ககன்யான் திட்டத்தை இஸ்ரோ தொடங்கி உள்ளது. இந்த திட்டம் வெற்றிகரமாக முடிந்தால் விண்வெளிக்கு மனிதனை அனுப்பிய நான்காவது நாடாக இந்தியா இருக்கும்.
மனிதனை விண்வெளிக்கு அனுப்புவதற்கு முன்பாக அனைத்தும் சரியாக உள்ளதா என்பதை தெரிந்து கொள்ள இரண்டு ஆளில்லாத விண்கலத்தை இந்தியா விண்ணுக்கு அனுப்ப உள்ளது. இதில் முதலாவது விண்கலத்தை டிசம்பர் மாதத்திற்குள் அனுப்ப இஸ்ரோ முடிவு செய்துள்ளது.
கொரோனா வைரஸ் பரவல் அதிகரிப்பால் தொழிற்சாலைகள் அனைத்தும் மூடப்பட்டு இருந்தது. இதனால் இந்த திட்டத்திற்கு தேவையான உபகரணங்கள் சரியான நேரத்தில் கிடைக்காமல் போனது. இருப்பினும் சுகன்யான் திட்டத்திற்கான பெரும்பாலான பணிகள் நிறைவடைந்து இருப்பதால் உரிய நேரத்தில் விண்கலத்தை விண்ணில் ஏவ முடியும் என விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.