ஒலிம்பிக்கின் முதல் நாளிலேயே இந்தியாவுக்கு பதக்கம்: மீராபாய் சானுவுக்கு தலைவர்கள் வாழ்த்து

Selvasanshi 2 Views
2 Min Read

டோக்கியோ ஒலிம்பிக்கில் பளு தூக்குதல் போட்டியில் இந்தியாவுக்கு பதக்கத்தை பெற்று தந்த மீராபாய் சானுவுக்கு பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.

கொரோனா நோய் தொற்று அச்சுறுத்தலுக்கும் இடையே 32-வது ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நேற்று தொடங்கியது. இதில் இந்தியா, இங்கிலாந்து, அமெரிக்கா, பிரான்ஸ் உள்பட 205 நாடுகள் கலந்து கொண்டுள்ளது. மேலும் இதில் 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் இந்த விளையாட்டு திருவிழாவில் கலந்துகொண்டுள்ளனர்.

இன்று காலை 10.30 மணிக்கு டோக்கியோ ஒலிம்பிக்கில் மகளிர் 49 கிலோ எடைப்பிரிவில் பளு தூக்கும் போட்டிகள் நடைபெற்றது. இந்த போட்டியில் கலந்து கொண்ட மணிப்பூரை சேர்ந்த மீராபாய் சானு 84 மற்றும் 87 கிலோ எடையை முதலில் தூக்கினார். பிறகு 89 கிலோ எடையை தூக்க அவர் முயற்சித்தார். அதை அவரால் தூக்க முடியவில்லை. இதைத் தொடர்ந்து மீராபாய் சானு 115 கிலோ எடையை தூக்கி ஒலிம்பிக்கில் மகளிர் 49 கிலோ பளு தூக்குதல் போட்டியில் இரண்டாவது இடத்தை பிடித்தார். இதன் மூலம் பளு தூக்கும் போட்டியில் இந்திய வீராங்கனை மீராபாய் சானு வெள்ளிப்பதக்கம் பெற்றுள்ளார். இந்தப் பிரிவில் சீனா தங்கப்பதக்கத்தை பெற்றுள்ளது.

பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், ‘டோக்கியோ ஒலிம்பிக்கில் மீராபாயின் அற்புதமான செயல் திறனைக் கண்டு இந்தியா மகிழ்ச்சி அடைகிறது. இந்தியாவுக்கு முதல் பதக்கத்தை பெற்று தந்த மீராபாய் சானுக்கு எனது மனமார்ந்த பாராட்டுகள். இவரது வெற்றி அனைத்து இந்தியர்களுக்கும் ஓர் உத்வேகம்’ என்று பதிவிட்டுள்ளார்.

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், ‘ஒலிம்பிக்கின் முதல் நாளிலேயே இந்தியாவுக்குப் பதக்கம் வென்று தந்த மீராபாய்க்கு எனது வாழ்த்துகள். தனது மகளால் இந்தியா பெருமைப் படுகிறது’ என்று பதிவிட்டுள்ளார்.

மேலும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘ஒலிம்பிக்கில் முதல் நாளிலேயே இந்தியாவுக்கு ஒரு பிரகாசமான ஆரம்பம். பளுதூக்குதலில் தனது சிறப்பான செயல்பாட்டினால் இந்தியாவுக்கு முதல் வெள்ளிப் பதக்கத்தைக் பெற்று தந்த மீராபாய் சானுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்’ என்று பதிவிட்டுள்ளார்.

 

Share This Article
Exit mobile version