இலக்கணக் குறிப்பு-ilakkana kurippu

Vijaykumar 100 Views
11 Min Read

பொதுத்தமிழ் – இலக்கணம் இலக்கணக் குறிப்பறிதல்

  • பெயரெச்சம்
  • வினையெச்சம்
  • முற்றெச்சம்
  • வினைத்தொகை
  • பண்புத்தொகை
  • வினைமுற்று
  • வினையாலணையும் பெயர்
  • உருவகம்
  • உவமைத்தொகை
  • ஈறுகெட்டஎதிர்மறைபெயரெச்சம்
  • இரட்டைக்கிளவி
  • அடுக்குத்தொடர்
  • எண்ணும்மை
  • உம்மைத்தொகை
  • உரிச்சொற்றொடர்
  • அன்மொழித்தொகை

1.பெயரெச்சம்:

ஒரு வினைச்சொல்லானது பெயர்ச்சொல்லைக் கொண்டு முடியுமாயின் அது பெயரெச்சம் ஆகும்.
(எ.கா)
படித்த மாணவன்வந்த வாகனம்தந்த பணம்கண்ட கனவுசென்ற நாட்கள்
மேற்கணடவற்றுள் படித்த,வந்த,தந்த,கண்ட,சென்ற போன்றவை பெயரெச்சங்கள் ஆகும்.

Contents
பொதுத்தமிழ் – இலக்கணம் இலக்கணக் குறிப்பறிதல்1.பெயரெச்சம்:பெயரெச்சத்தை எப்படி எளிதாக கண்டுபிடிப்பது?பெயரெச்சத்தின் வகைகள்:தெரிநிலைப் பெயரெச்சம்குறிப்புப் பெயரெச்சம்எதிர்மறைப் பெயரெச்சம்ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்2.வினையெச்சம்:வினையெச்சத்தை எப்படி எளிதாக கண்டுபிடிப்பது?வினையெச்சம் வகைகள்தெரிநிலை வினையெச்சம்குறிப்பு வினையெச்சம்3. முற்றெச்சம்4.வினைத்தொகை:வினைத்தொகை என்றால் என்ன?வினைத்தொகையை எப்படி கண்டறிவது?5.பண்புத்தொகைபண்புத்தொகை என்றால் என்ன?பண்புத்தொகையைக் கண்டறிவது எப்படி?இருபெயரொட்டுப் பண்புத்தொகை6.வினை முற்றுவினைமுற்று என்றால் என்ன?தெரிநிலை வினைமுற்றுகுறிப்பு வினைமுற்றுஏவல் வினைமுற்றுஏவல் ஒருமை வினைமுற்றுஏவல் பன்மை வினைமுற்றுவியங்கோள் வினைமுற்றுஉடன்பாட்டு வினைமுற்றுஎதிர்மறை வினைமுற்று7.வினையாலணையும் பெயர்:8. உருவகம்:9.உவமைத்தொகை:10. ஈறு கெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்11.இரட்டைக்கிளவி:12.அடுக்குத்தொடர்:13. எண்ணும்மை:14. உம்மைத்தொகை:15. உரிச்சொற்றொடர்:16. அன்மொழித்தொகை

பெயரெச்சத்தை எப்படி எளிதாக கண்டுபிடிப்பது?

படித்த மாணவன்,வந்த வாகனம்,தந்த பணம்,கண்ட கனவு,சென்ற நாட்கள் போன்ற வாக்கியங்களைக் கொடுத்து இதன் இலக்கண வகை என்ன என்று கேட்டால்.நீங்கள் முதலில் உள்ள படித்த,வந்த,தந்த,கண்ட,சென்ற போன்றவற்றை கணக்கிட்டுதான் பெயரெச்சம் என எண்ண வேண்டும்.

முதலில் படித்த,வந்த,சென்ற போன்ற வார்த்தைகளை நன்றாக உச்சரித்துப் பாருங்கள்.அவ்வார்த்தைகள ‘அ’ என்னும் சத்தத்தோடு முடியும்.

விளக்கம்:

படித்த- இதன் கடைசி எழுத்து ‘த’
‘த’ என்ற எழுத்தை பிரித்தால் த்+அ என்று பிரியும்.
இப்படி வார்த்தையின் இறுதியில் ‘அ’ என்னும் சத்தம் ஒலித்தால் அது பெயரெச்சம் தான் என முடிவெடுத்துக் கொள்ளவும்.

பெயரெச்சத்தின் வகைகள்:

அ.தெரிநிலைப் பெயரெச்சம்
ஆ.குறிப்புப் பெயரெச்சம்
இ.எதிர்மறைப் பெயரெச்சம்
ஈ.ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
என வகைப்படும்.

தெரிநிலைப் பெயரெச்சம்

காலத்தை வெளிப்படையாகக் காட்டி, அச்சொல் முடியாமல் நின்று, பெயர்ச்சொற்களைக் கொண்டு முடிந்தால் அது தெரிநிலைப் பெயரெச்சமாகும்.
இது மூன்று காலங்களிலும் வரும்.
(எ.கா)
படித்த மாணவன்படிக்கின்ற மாணவன்படிக்கும் மாணவன்

குறிப்புப் பெயரெச்சம்

காலத்தை வெளிப்படையாகக் காட்டாமல், ஒரு செயலை உணர்த்தாமல், பண்பினை மட்டும் உணர்த்தி பெயர்ச்சொல்லாக முடிந்தால் அதுவே குறிப்பு பெயரெச்சம் எனப்படுகிறது.
(எ.கா)
நல்ல பையன்கரிய உருவம்

எதிர்மறைப் பெயரெச்சம்

(எ.கா.) பாடாத பைங்கிளிகேட்காத செவிபேசாத பெண்
சொற்களை வாசித்தாலே எதிர்மறை என எளிதாக அறியலாம்.

ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்

ஈற்றெழுத்து கெட்டுவரும் எதிர்மறைப்பெயரெச்சம் ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சமாகும். “ஆ” எனும் விகுதியில் முடியும்.

(எ.கா.)
பாடா(ட்+ஆ) பைங்கிளிபொய்யா மொழிவாடா மலர்பேசா வாய்சிந்தா மணிமாறா அன்புசெல்லா காசுதேரா மன்னா

2.வினையெச்சம்:

தொழிலையும் காலத்தையும் உணர்த்தி வினயைக் கொண்டு முடியும் சொல் வினைச்சொல் ஆகும்.

(எ.கா.)
படித்து முடித்தான்வந்து சென்றான்ஓடி மறைந்தான்பாடி முடித்தான்சென்று வந்தான்.
மேற்கணடவற்றுள் படித்து,வந்து,ஓடி,பாடி,சென்று போன்றவை வினையெச்சங்கள் ஆகும்.

வினையெச்சத்தை எப்படி எளிதாக கண்டுபிடிப்பது?

படித்து முடித்தான்,வந்து சென்றான்,ஓடி மறைந்தான்,பாடி முடித்தான்,சென்று வந்தான் போன்ற வாக்கியங்களைக் கொடுத்து இதன் இலக்கண வகை என்ன என்று வினா வரும்போது முதலில் உள்ள படித்து,வந்து,ஓடி,பாடி,சென்று போன்றவற்றை கணக்கிட்டுதான் அவை வினையெச்சம் என எண்ண வேண்டும்.

முதலில் படித்து,வந்து,சென்று போன்ற வார்த்தைகளை நன்றாக உச்சரித்துப் பாருங்கள்.அவ்வார்த்தைகள ‘உ’ என்னும் சத்தத்தோடு முடியும்..

விளக்கம்:

படித்து- இதன் கடைசி எழுத்து ‘து’
‘து’ என்ற எழுத்தை பிரித்தால் த்+உ என்று பிரியும்.
பாடி,ஆடி,ஓடி என்ற வார்த்தைகளை உச்சரித்துப் பாருங்கள். அவ்வார்த்தைகள் ‘இ’ சத்தத்தில் முடியும்.

விளக்கம்:

பாடி-இதன் கடைசி எழுத்து ‘டி’
‘டி’ என்ற எழுத்தைப் பிரித்தால் ட்+இ என்று பிரியும்.
இப்படி வார்த்தையின் இறுதியில் ‘உ’ மற்றும் ‘இ’ என்னும் சத்தம் ஒலித்தால் அது வினையெச்சம் தான் என முடிவெடுத்துக் கொள்ளவும்.

வினையெச்சம் வகைகள்

(அ) தெரிநிலை வினையெச்சம்
(ஆ) குறிப்பு வினையெச்சம்
என வினையெச்சம் வகைப்படும்.

தெரிநிலை வினையெச்சம்

தெரிநிலை வினையெச்சமானது வெளிப்படையாக காலத்தைக் காட்டி வினைச்சொல்லைக் கொண்டு முடியும்.

(எ.கா.)
வந்து போனான்நின்று வந்தான்

குறிப்பு வினையெச்சம்

குறிப்பு வினையெச்சமானது வெளிப்படையாக காலத்தைக் காட்டாமல் பண்பின் அடிப்படையில் வினைச்சொல்லைக் கொண்டு முடியும்.

(எ.கா.)
மெல்ல நடந்தான்கோபமாக பேசினான்

3. முற்றெச்சம்

  • ஒரு வினைமுற்று சொல் தன்னுடைய வினைமுற்று பொருளை தராமல். வினையெச்ச பொருளைத் தருமாயின் அதற்கு “முற்றெச்சம்” என்று பெயர்.
  • இச்சொல் தனித்து நோக்கும்போது வினைமுற்றாகத் தோன்றும்.
  • இரண்டு வினைமுற்று தொடர்ந்து வருமாயின் அது முற்றெச்சம் ஆகிறது.

(எ.கா.) சிறுவர் பாடினர் மகிழ்ந்தனர்படித்தனர் தேர்ந்தனர்எழுதினன் முடித்தனன

4.வினைத்தொகை:

வினைத்தொகை என்றால் என்ன?

மூன்று காலத்திற்கும் பொருந்தி பெயர்ச்சொல்லால் தழுவப்பெற்று வரும் தொடரே வினைத்தொகை ஆகும்.

(எ.கா.) ஊறுகாய்

வினைத்தொகையை எப்படி கண்டறிவது?

  • வினைத்தொகையில் இரு சொற்கள் இருக்கும்.முதல் சொல்லானது வினைச்சொல்லாக இருக்கும்.இரண்டாவது சொல்லானது பெயர்ச்சொல்லாக இருக்கும்.
  • ஊறுகாய் என்பதில் ஊறு என்பதை வினைச்சொல்லாகவும் காய் என்பதை பெயர்ச்சொல்லாகவும் எடுத்துக் கொள்க.
  • இந்த ஊறுகாய் என்ற சொல்லில் மூன்று காலங்களும் மறைந்து இருக்கின்றன.
  • ஊறிய காய்-இறந்த காலம்ஊறுகின்ற காய்-நிகழ்காலம்ஊறும் காய்-எதிர்காலம்
    இப்பொழுது மூன்று காலங்களும் வெளிப்படுகிறது அல்லவா. இதைப்போல கொடுக்கப்பட்ட விடைகளில் எந்த சொல்லானது மூன்று காலங்களையும் உள்ளடக்கி வருகிறதோ அதுவே வினைத்தொகை என முடிவு கொள்ளுங்கள்.

(எ.கா.)
1)படர்கொடி படர்ந்த கொடி-இறந்த காலம்படர்கின்ற கொடி-நிகழ்காலம்படரும் கொடி-எதிர்காலம்

2)சுடுசோறு சுட்ட சோறு-இறந்த காலம்சுடுகின்ற சோறு-நிகழ்காலம்சுடும் சோறு-எதிர்காலம்

3)குடிநீர் குடித்த நீர்-இறந்த காலம்குடிக்கின்ற நீர்-நிகழ்காலம்குடிக்கும் நீர்-எதிர்காலம்
கொடுக்கப்பட்டிருக்கிற அனைத்து விடைகளையும் சொல்லி சொல்லிப் பாருங்கள்.முக்காலத்தையும் உணர்த்துகிறதா என்று.ஒரு விடை மட்டும்தான் முக்காலத்தையும் உணர்த்தும்.

5.பண்புத்தொகை

பண்புத்தொகை என்றால் என்ன?

ஒரு சொல்லானது பொருளின் பண்பையும் குணத்தையும் உணர்த்தி வந்தால் அது பண்புத்தொகை ஆகும்.

(எ.கா.) செந்தாமரை

பண்புத்தொகையைக் கண்டறிவது எப்படி?

  • கொடுக்கப்பட சொற்களில் எந்த சொல்லைப் பிரிக்கும் போது ‘மை’ விகுதி வருகிறதோ அது பண்புத்தொகை எனக் கண்டறிக.
  • ‘செந்தாமரை’ என்ற வார்த்தையைப் பிரித்தால் செம்மை+தாமரை என்று பிரியும்.
  • ‘மை’ விகுதி தெரிகிறதா.ஒரு வார்த்தையை சரியாக பிரித்தால்தான் ‘மை’ விகுதியைக் கணடறிய முடியும்.
  • நிறத்தை குறிக்கும் சொற்கள்: பசுமை,நீலம்,வெண்மை
    குணத்தைக் குறிக்கும் சொற்கள்:நன்மை,தீமை,கொடுமை,பொறாமை
    சுவையைக்குறிக்கும் சொற்கள்: காரம்,புளிப்பு,கசப்பு
    வடிவத்தைக் குறிக்கும் சொற்கள்:சதுரம்,வட்டம்,நாற்கரம்

இருபெயரொட்டுப் பண்புத்தொகை

சிறப்புப் பெயர்கள் முன்னும் பொதுப்பெயர்கள் பின்னும் நின்று இடையில் “ஆகிய” எனும் பண்பு உருபு மறைந்து வருவதே இருபெயரொட்டுப் பண்புத்தொகை ஆகும்.

(எ.கா.) சாரைப்பாம்பு, நாகப்பாம்புஇந்திய நாடு, தமிழ்நாடுமாமரம், குமரிப்பெண்வாழை மரம்.தாமரைப் பூபொருட்செல்வம்கடல் நீர்தைத்திங்கள்அவி உணவுஅரவணைசெருக்களம்

6.வினை முற்று

வினைமுற்று என்றால் என்ன?

முடிவு பெற்ற வினைச்சொல்லே வினைமுற்று ஆகும்.

(எ.கா): படித்தான்
படித்தான் என்றாலேயே ஒருவன் படித்து முடித்துவிட்டான் என்று பொருள்.

இப்படி ஒரு வினை முற்று பெற்றால் அது வினை முற்று.
‘படித்தான்’ என்பதில்
‘படித்த’ என்பது பெயரெச்சம்
‘படித்து’ என்பது வினையெச்சம்
‘படித்தான்’ என்பது வினைமுற்று.
பெயரெச்சமும் வினையெச்சமும் முடிவைத் தராது.’படித்தான்’ என்ற வார்த்தை முடிவை பெற்றிருக்கிறது.எனவே அது வினைமுற்று.

அ.தெரிநிலை வினைமுற்று
ஆ.குறிப்பு வினைமுற்று
இ.ஏவல் வினைமுற்று
ஈ.வியங்கோள் வினைமுற்று
உ.உடன்பாட்டு வினைமுற்று
ஊ.எதிர்மறை வினைமுற்று
இவ்வாறாக ஒரு வினைமுற்றை வகைப்படுத்திக் காணலாம்.

தெரிநிலை வினைமுற்று

ஒரு வினைமுற்றானது செய்பவன், கருவி, நிலம், செயல், காலம், செயப்படுபொருள் ஆகிய ஆறிணையும் வெளிப்படையாக உணர்த்தி வரும். ஒரு செயல் நடந்து முடிந்ததாக தெரியும்.

(எ.கா) ஓவியன் சித்திரம் தீட்டினான். செய்பவன் – ஓவியம்
கருவி – வர்ணம்
நிலம் – சுவர்
செயல் – தீட்டுதல்
பொருள் – சித்திரம்
காலம் – இறந்த காலம்.
(எ.கா)
எழிலரசி மாலை தொடுத்தாள்.
செய்பவள் – எழிலரசி
கருவி – நார், கை
நிலம் – இருப்பிடம்
செயல் – தொடுத்தல்
பொருள் – மாலை
காலம் – இறந்த காலம்.

குறிப்பு வினைமுற்று

திணை, பால் ஆகியவற்றை வெளிப்படையாகக் காட்டி காலத்தை மட்டும் குறிப்பாக உணர்த்தி வரும் வினைக்குறிப்பே குறிப்பு வினைமுற்று எனப்படும். இது காலத்தை (வெளிப்படையாக) காட்டாது.

(எ.கா)
வளவன் தற்போது பொன்னன்.
செங்கண்ணன் கரியன்
பாலன் இன்று செல்வன்
பொன்னன் – பொருள்
மதுரையான், குற்றாலத்தான் – இடம்
ஆதிரையான் – காலம்
செங்கண்ணன் – சினை
இனியன், கரியன் – பண்பு (அ) குணம்
நடிகன், நடையன் – தொழில்

இவ்வாறாக பொருள், இடம், காலம், சினை, பண்பு, தொழில் ஆகியவற்றைச் சார்ந்தே குறிப்பு வினைமுற்று அமையும்.

ஏவல் வினைமுற்று

முன்னிலையில் ஒருவனை, ஒருத்தியை அல்லது ஒன்றினை ஆணையிட்டு ஏவும் வினையே ஏவல் வினைமுற்று என்பதாகும்.இது எதிர்காலத்தைக் காட்டி வரும். ஒருமை, பன்மையை உணர்த்தும்.

ஏவல் ஒருமை வினைமுற்று

(எ.கா)நீ நட, நீ செய், நீ போ, நீ படி

ஏவல் பன்மை வினைமுற்று

(எ.கா)நீர் உண்குவீர்,நீர் வாரீர், நீர் செய்குதும்

வியங்கோள் வினைமுற்று

க-இய-இயர் என்ற விகுதிகளைப் பெற்று வரும். வாழ்த்துதல், வைதல், விதித்தல், வேண்டிக்கொடல் ஆகிய பொருள்களில் வரும்.இது மூன்று இடங்களையும் ஐம்பால் உணர்த்தி வரும்.

(எ.கா) வாழ்க, வாழிய, வாழியர், வாழ்த்துதல் ஒழிக, கெடுக, வைதல், செல்க வருக, ஈக, விதித்தல், தருக வேண்டல், சிரிக்க, பார்க்க

உடன்பாட்டு வினைமுற்று

(எ.கா) செய்வார், வாழ்வார், துறப்பார்

எதிர்மறை வினைமுற்று

(எ.கா) செய்யார், வாழாதவர், துறவார்

7.வினையாலணையும் பெயர்:

ஒரு வினைமுற்று சொல் தன் வினைமுற்றுப் பொருளைக் காட்டாமல் வினை செய்தவனையோ அல்லது பொருளையோ குறிக்கும் பெயர்ச்சொல்லாக வருவதே வினையாலணையும் பெயர் ஆகும்.

(எ.கா) படித்தவன்,கண்டவர்,சென்றனன்

கொடுக்கப்பட்டுள்ள விடைகளில் எந்த விடை அவர்,அவன்,அனன் போன்றவற்றில் முடிகிறதோ அதுவே வினையாலணையும் பெயர் என முடிவு கொள்க.

‘காட்சியவர்’ என்பதன் இலக்கணக்குறிப்பு தருக.
அ) காலப்பெயர்
ஆ)இடப்பெயர்
இ)வினையாலணையும் பெயர்
ஈ) பண்புப்பெயர்
காட்சியவர் என்ற சொல் ‘அவர்’ என முடிவதால் அதுவே வினையாலணையும் பெயர் ஆகும்.

8. உருவகம்:

உவமைத்தொகையை நன்றாகப் புரிந்து கொண்டீர்களா.அப்படியானால் உருவகத்தை புரிந்து கொள்வது மிகச்சுலபம்.

அதாவது ‘மலரடி’ என்ற சொல் உவமைத்தொகை என்பதைப் பார்த்தோம். அச்சொல்லை திருப்பி எழுதினால் அது உருவகம்.

‘மலரடி’ என்ற சொல்லை ‘அடிமலர்’ என்று மாற்றியமைக்கும் போது உருவகம் ஆகிறது.

விளக்கம்:
ஒரு பெண்ணின் முகத்தை பார்க்கிறீர்கள்..உடனே மலரைப் போன்ற முகம் என மலருடன் அவளது முகத்தை ஒப்பிடுகிறீர்கள்.இதுவே ‘மலர்முகம்’.இது உவமைத் தொகை.

இன்னும் ஒருபடி மேலே போய்,மலரைப்போன்று முகமில்லை.இவள் முகத்தைப் போலத்தான் அம்மலர் இருக்கிறது என்று சொல்வீர்களானால் அது உருவகம்.அதாவது முகமலர்.

எடுத்துக்காட்டு:
உவமைத்தொகை உருவகம்
மலர்முகம் முகமலர்
மலர்க்கை கைமலர்
தாய்மொழி மொழித்தாய்
கயல்விழி வி ழிகயல்
அன்னைத்தமிழ் தமிழன்னை
மலர்விழி விழிமலர்

9.உவமைத்தொகை:

பொருளுக்கும் உவமைக்குமிடையே போன்ற,போல,அன்ன,நிகர போன்ற உவம உருபுகள் மறைந்து வருமாயின் அவை உவமைத்தொகை எனப்படும்.

(எ.கா) கனிவாய்,மலரடி’கனிவாய்’ என்ற சொல்லிற்கு பொருள் கனி போன்ற வாய் என்பதாகும். அப்படியானல் ‘போன்ற’ என்ற உருபு மறைந்து வருவதைக் காணலாம்.

எனவே ‘கனிவாய்’ என்பது உவமைத்தொகை ஆகும். அதேபோல ‘மலரடி’ என்பதன் பொருள் மலர் போன்ற பாதம் என்பதாகும்.இதிலும் ‘போன்ற’ என்ற உருபு மறைந்து வருகிறது.

பெரும்பாலும் ‘போன்ற’ என்ற உருபு மறைந்து வரும்படியே வினாக்கள் அமையும்.

எ.கா
1.மலர்முகம்
2.மலர்விழி
3.மலர்க்கை
4.தாய்மொழி
5.கயல்விழி
6.அன்னைத்தமிழ்

மேற்கண்டவை அனைத்தும் உவமைத்தொகை ஆகும்.

10. ஈறு கெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்

ஈறு கெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் என்பது எதிர்மறையான பொருளில் வரும் ஒரு வினைச்சொல், அதன் கடைசி எழுத்து இல்லாமல் (ஈறு = கடைசி; கெட்ட = இல்லாமல்) வந்து, அடுத்து வரும் பெயர்ச்சொல்லுக்கு விளக்கம் தருவதாக அமையும் சொல்.
(எ.கா)
செல்லாக் காசு (= செல்லாத காசு.)
என்பதில் செல்லா என்பது ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம். செல்லும் என்பது உடன்பாட்டு பொருள். செல்லாத என்பது எதிர்மறைப் பொருள்.

செல்லாத என்னும் சொல், செல்லாதது என்று முடிவு பெறாமல் எச்சமாக வரும் வினைச்சொல். செல்லா என்பது செல்லாத என்னும் சொல்லின் கடைசி எழுத்தாகிய ‘த’ இல்லாமல் (கெட்டு) வருவது. மேலும் செல்லா என்னும் சொல், காசு என்னும் பெயர்ச்சொல்லைப் பற்றிக் கூறவந்த வினைச்சொல்.

எனவே செல்லாக் காசு என்னும் தொடரில், செல்லா என்னும் சொல்லை ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் என்று கூறுவர்.

11.இரட்டைக்கிளவி:

ஒரு சொல் தொடர்ந்து இரண்டுமுறை வரும்.ஆனால் தனித்தனியே அவற்றைப் பிரித்தால் பொருளைத்தராது அதுவே இரட்டைக்கிளவி ஆகும்.

(எ.கா)
சலசல,கலகல
மேற்கண்ட வார்த்தைகளை சல,கல என பிரித்தால் பொருளைத் தராது.எனவே அது இரட்டைக்கிளவி எனப்படும்.

12.அடுக்குத்தொடர்:

ஒரு சொல் தொடர்ந்து இரண்டுமுறை வரும்.ஆனால் தனித்தனியே அவற்றைப் பிரித்தால் பொருளைத்தரும். அதுவே அடுக்குத்தொடர் ஆகும்.

(எ.கா)
பாம்பு பாம்பு,வருக வருக
மேற்கண்ட வார்த்தைகளை பாம்பு,வருக என பிரித்தால் பொருளைத் தரும்.எனவே அது அடுக்குத்தொடர் எனப்படும்.

ஒருபொருட்பன்மொழி
ஒரு பொருளின் சிறப்பிற்காக அப்பொருளைக் குறிக்க பல சொற்கள் வருவது ஒருபொருட்பன்மொழி ஆகும்.
(எ.கா)
ஓங்கி உயர்ந்த
ஒரு தனி
தொழுது வணங்கினான்
காத்து ஓம்பினான

13. எண்ணும்மை:

கொடுக்கப்பட்டுள்ள சொற்களில் ‘உம்’ எனும் விகுதி வெளிப்படையாக வருமாயின் அது எண்ணும்மை எனப்படும்.

(எ.கா)
*அல்லும் பகலும் *காதலும் கற்பும் *அவனும் இவனும் சிறப்பு எண்ணும்மை

சொற்கள் “உடனும்” என முடியும்.
(எ.கா) வானுடனும், கடவுளுடனும் ,உயர்வு சிறப்பும்மை
சொற்கள் “னினும்” என்று முடியும்.
(எ.கா) வானினும், ஊனினும், தேனினும்

14. உம்மைத்தொகை:

கொடுக்கப்பட்டுள்ள சொற்களில் ‘உம்’ எனும் சொல் வெளிப்படையாக தெரியாமல் மறைந்து வந்தால் அது உம்மைத்தொகை எனப்படும்.

(எ.கா) அவன் இவன்,இரவு பகல்,இராப்பகல் எனவே ‘உம்’ எனும் சொல் வெளிப்படையாக வந்தால் அது எண்ணும்மை ஆகும்.அதுவே மரைந்து வந்தால் அது உம்மைத்தொகை.

15. உரிச்சொற்றொடர்:

ஒன்றை பெரிது படுத்திக் காட்டுவது உரிச்சொற்றொடர் ஆகும்.

(எ.கா) மாநகரம்
அதாவது பெரிய நகரம் என்று சொல்வதற்கு பதிலாக மாநகரம் என்று சொல்கிறோம்.இதுவே உரிச்சொற்றொடர் ஆகும்.
கீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றை மனதில் படித்துக் கொள்ளவும்.
1.சால
2.உறு
3.தவ
4.நனி
5.கூர்
6.கழி
7.கடி
8.மா
9.தட

மேற்கண்டவை அனைத்தும் ‘பெரிய’ என்ற பொருளைத் தரக்கூடிய சொற்கள்.எனவே கேட்கப்படும் உரிச்சொற்றொடர்கள் இவற்றில் ஏதாவது ஒன்றில்தான் ஆரம்பிக்கும்.

(எ.கா) தடக்கை,தவப்பயன்,உறுபடை

16. அன்மொழித்தொகை

வேற்றுமைத்தொகை, வினைத்தொகை, பண்புத்தொகை, உவமைத்தொகை,உம்மைத்தொகை ஆகிய ஐந்து தொகைகளும் தொடருக்கு புறத்தே அமையாமல்மறைந்திருந்து பொருள் தருமாயின் அது அன்மொழித் தொகையாகும்.
(எ.கா) பொற்றொடி வந்தாள். (பொன்னால் செளிணியப்பட்ட வளையல்) பூங்குழலி வந்தாள்
சேயிழைக் கணவன்,தேன்மொழி நகைத்தாள்,இன்மொழி சொன்னான்,சுடுகதிர் எழுந்தான்.

 

Share This Article
Exit mobile version