வீட்டிலேயே எளியமுறையில் உலர் திராட்சை செய்வது எப்படி?

Selvasanshi 10 Views
2 Min Read

நம் உடலுக்கு தேவையான அதிகப்படியான சத்துகளை தர கூடிய உலர் திராட்சையை இனி அதிக காசு கொடுத்து கடைகளில் வாங்க வேண்டாம். எந்த வித கெமிக்கலும் சேர்க்காமல், ஆரோக்கியமான உலர் திராட்சைகளை குறைந்தவிலையில் நம் வீட்டிலேயே எளியமுறையில் எப்படி தயார் செய்வது என்பதைப் பற்றிப் பார்ப்போம்.

தேவையான அளவு விதையில்லாத திராட்சை பழங்களை கடையிலிருந்து வாங்கிக் கொள்ளுங்கள். அந்த திராட்சைகளை ஒவ்வொன்றாக எடுத்து அகலமான பாத்திரத்தில் போட்டு, அழுகிய திராட்சைகள் ஒன்று கூட இல்லாமல் நன்றாக சுத்தம் செய்து கொள்ளுங்கள்.

அதன் பின் திராட்சைகளை கொஞ்சம் உப்பு தூள் சேர்த்த தண்ணீரில் 1/2 மணி நேரம் ஊற வைத்து, ஒரு முறை சுத்தமான தண்ணீரில் கழுவி, தண்ணீரை வடித்து எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.

அதன் பின்னர் திராட்சையை வேக வைக்க வேண்டும். இதற்காக இட்லி பாத்திரத்தில் ஆவியில் வேகவைக்க தேவையான அளவு தண்ணீரை ஊற்றி வைத்துக் கொள்ள வேண்டும். இட்லி தட்டில் ஒவ்வொரு குழியிலும் கொஞ்சம் கொஞ்சமாக திராட்சைகளை அடுக்கி வைத்து, மூடி போட்டு 7 லிருந்து 10 நிமிடங்கள் ஆவியில் அந்த திராட்சை பழங்களை வேக வைக்க வேண்டும்.

திராட்சை பழங்கள் தோல் சுருங்கி வரும் பதம் வரை ஆவியில் வேக வைக்க வேண்டும். பத்து நிமிடங்களில் திராட்சைப்பழம் தோல் சுருங்கி வெந்துவிடும். (தோல் சுருங்காத, ஆவியில் வேகாத திராட்சை பழங்கள் வெயிலில் காய்ந்தாலும் உலர்திராட்சையாக மாறாது.) ஆவியில் வேகவைத்த இந்த திராட்சை பழங்களை ஒரு வெள்ளை துணியிலோ அல்லது தாம்பூல தட்டிலோ ஒவ்வொன்றாக எடுத்து தனித்தனியாக காய வைக்கவேண்டும். திராட்சையின் தோலில் விரிசல் இருக்க கூடாது.

அதிக வெயிலில் இந்த திராட்சை பழங்களை இரண்டிலிருந்து மூன்று நாட்கள் வரை காய வைக்க வேண்டும். முதல் நாள் காய்ந்த திராட்சை பழங்களை, 2-வது நாள் திருப்பி விட வேண்டும். அப்போது தான் திராட்சை பழம் நன்றாக காயும். குறைந்த பட்சம் மூன்று நாட்கள் வெயிலில் காய வைத்து பின்னர் எடுத்தால் உலர் திராட்சை தயாராகி விடும்.

இதை கண்ணாடி பாட்டிலில் அல்லது காற்று உள்ளே புகாத ஏர் டைட் கவரில் பத்திரப்படுத்தி ஃபிரிட்ஜில் வைத்து ஒரு வருடம் வரை கூட பயன்படுத்திக் கொள்ளலாம். கெட்டுப்போவதற்கு வாய்ப்பே கிடையாது. எந்தவிதமான கெமிக்கலும் கலக்காத உலர் திராட்சை, அதுவும் குறைந்த விலையில் நமக்கு கிடைத்துவிடும்.

Share This Article
Exit mobile version