அடுத்த 10 நாட்கள் மிகவும் கவனத்துடன் செயல்பட வேண்டும் – சுகாதாரத்துறை எச்சரிக்கை.!

Selvasanshi 1 View
1 Min Read

கடந்த சில நாட்களாக தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது. அதனால் மக்கள் பெரும் நிம்மதி அடைந்துள்ளனர். இருப்பினும் தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 1,500 என்ற நிலையிலேயே தொடர்கிறது. இந்த நிலையில் சென்னை டி.எம்.எஸ். வளாகத்தில் உள்ள மருந்து சேமிப்பு கிடங்கை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் நேரில் சென்று ஆய்வு செய்தார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது, நம் அண்டை மாநிலங்களான ஆந்திரா, கேரளாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் நம் மாநிலத்தின் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் கண்காணிப்பை தீவிரப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக அடுத்த 10 நாட்கள் மிகவும் கூர்ந்த கவனத்துடன் செயல்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் ஆந்திரா- தமிழகம், கேரளா- தமிழகம் எல்லைப் பகுதிகளில் உள்ள கிராமங்களில் நாள்தோறும் பக்கத்து மாநிலங்களுக்குச் சென்று வருபவர்களுக்கு 100% தடுப்பூசி செலுத்துவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் மாவட்ட கலெக்டர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கொரோனா மூன்றாவது அலை வந்தாலும் அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை தயாராக உள்ளது.

மேலும் தமிழகத்தில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அஜாக்கிரதையாக இருக்கக்கூடாது. கட்டாயம் அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். அதேபோல் முக கவசம் அணிதல், சமூக இடைவெளி ஆகியவற்றையும் கடைப்பிடிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Share This Article
Exit mobile version