இந்திய அரசாங்கத்தின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் கடந்த பிப்ரவரி 25 ஆம் தேதி, அனைத்து சமூக ஊடக நிறுவனங்களுக்கும் புதிய விதிகளை பிறப்பித்தது. மேலும் அவற்றை பின்பற்ற மூன்று மாத கால அவகாசம் அளித்து இருந்தது.
இந்த கால அவகாசம் இன்றுடன் முடிவடைகிறது. இந்நிலையில் தற்போது மத்திய அரசின் சட்டங்களுக்கு உட்பட்டு புதிய டிஜிட்டல் விதிகளை ஏற்கத் தயார் என்று கூகுள் நிறுவனம் தெரிவித்து இருக்கிறது.
இந்தியாவில் உள்ள ஒவ்வொரு நிறுவனமும் தங்களுக்கான ஒரு அதிகாரியை நியமித்து, அந்த அதிகாரியின் பெயர் மற்றும் தொடர்பு முகவரியை மத்திய அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் தெரிவித்து இருந்தது. இதன் மூலம் புகார் அளித்தல், ஆட்சேபிக்கத்தக்க உள்ளடக்கத்தை கண்காணித்தல், இணக்க அறிக்கை மற்றும் ஆட்சேபகரமான உள்ளடக்கத்தை நீக்குதல் ஆகியவற்றை செய்ய மத்திய அரசு நோக்கமாக கொண்டு உள்ளது.
மத்திய அரசின் இந்த புதிய டிஜிட்டல் விதிகளுக்கு கூகுள், ட்விட்டர், இன்ஸ்ட்ராகிராம் போன்றவை பதில் அளிக்காமல் இருந்தது. இந்நிலையில் இத்தளங்களை தடை செய்யக்கூடும் என்ற தகவல் வெளியாகி இருந்தது.
புதிய ஐ.டி.விதிகளுக்கு இன்றுடன் கால அவகாசம் முடிவடையும் நிலையில், தற்போது இந்தியாவின் சட்டங்களுக்கு உட்பட்டு புதிய டிஜிட்டல் விதிகளை ஏற்க தயார் என்று கூகுள் நிறுவனம் தெரிவித்து இருக்கிறது.
மேலும் இது பற்றி கூகுள் நிறுவனத்தில் பணிபுரியும் அதிகாரி ஒருவர் கூறுகையில், இந்தியா சட்டங்களை நாங்கள் மதிக்கிறோம். அதனால், அந்த சட்டங்களை மீறும் வகையிலான உள்ளடக்கங்களை நீக்கிய நீண்ட வரலாறு எதிர்காலத்தில் கூகுளுக்கு இருக்கும் என்று கூறினார்.