NEET தேர்வு குறித்து பொதுமக்கள் கருத்து தெரிவிக்கலாம்..!

Selvasanshi 1 View
1 Min Read

தமிழகத்தில் நீட் (NEET) தேர்வின் மூலம் மருத்துவச் சேர்க்கையில் மாணவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை ஆராய ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே. இராஜன் தலைமையில் 9 பேர் கொண்ட உயர்நிலைக் குழுவை அமைத்து முதல்வர் மு.க ஸ்டாலின் உத்தரவுட்டுள்ளார்.

ஒன்பது பேர் கொண்ட இந்த குழுவில் மருத்துவர் ஜி.ஆர்.ரவீந்திரநாத், மருத்துவர் ஜவஹர் நேசன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலாளர், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சிறப்புப் பணி அலுவலர், மருத்துவக் கல்வி இயக்ககத்தின் இயக்குநர், பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலாளர், சட்டத்துறை அரசு செயலாளர் ஆகியோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த குழு நீட் தேர்வு குறித்து ஆராய்ந்து ஒரு மாதத்திற்குள் அறிக்கை சமர்ப்பிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜூன் 14 ஆம் தேதி இந்த குழுவின் முதல் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து வருகிற 21-ம் தேதி இரண்டாவது ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது.

மேலும் நீட் தேர்வு தொடர்பாக வெளியிடப்பட்ட நாளிதழ் விளம்பரத்தில், நீட் தேர்வு குறித்த பொது மக்கள் தங்கள் கருத்துக்களை ஐந்து பக்கங்களுக்கு மிகாமல் அஞ்சல் வழி மூலமாக நீதிபதி ஏ.கே.ராஜன், உயர்நிலைக் குழு, மருத்துவ கல்வி இயக்ககம், 3வது தளம், கீழ் பாக்கம், சென்னை – 600 010 என்ற முகவரிக்கோ அல்லது neetimpact2021@gmail.com என்ற மின்னஞ்சல் மூலமாகவோ தெரிவிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. மேலும், தங்கள் கருத்துக்கள் கடிதமாக எழுதி நேரடியாக மருத்துவக் கல்வி இயக்குநகரத்தில் வைக்கப்பட்டுள்ள தனிப் பெட்டியில் போடலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொது மக்கள் நீட் தேர்வு குறித்த தங்கள் கருத்துக்களை வரும் 23.06.2021க்குள் சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டது.

Share This Article
Exit mobile version