இன்று நள்ளிரவு முதல் சமையல் சிலிண்டர் விலை குறைப்பு

1 Min Read

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருவதால் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் போன்ற பொருட்களின் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வரும் நிலையில் எண்ணெய் நிறுவனங்கள் கடந்த சில நாட்களாக பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை தொடர்ந்து உயர்த்தி வருகிறது.

எண்ணெய் நிறுவனங்கள் கடந்த சில நாட்களாக சமையல் சிலிண்டர் விலையை மாதத்திற்கு இரண்டு முறை நிர்ணயம் செய்து வருகிறது. அதன்படி, கடந்த பிப்ரவரி மாதத்தில் மட்டும் சமையல் சிலிண்டர் விலையில் 100 ரூபாய் உயர்த்தப்பட்டது.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவினால் நாடு முழுவதும் பொருளாதாரத்தில் மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட்டது. இந்த பாதிப்பு காரணமாக விலைவாசி தொடர்ந்து உயர்ந்து கொண்டே வந்த நிலையில், நாள்தோறும் பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையும் உயர்ந்து வருவதால் பொதுமக்கள் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகினர்.

இந்நிலையில் இந்த மாதமும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்தியன் ஆயில் நிறுவனம் தமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையில் ரூ.10 குறைப்பதாக அறிவித்துள்ளது.

தமிழகத்தில் சிலிண்டர் விலை குறைப்பு இன்று நள்ளிரவு முதல் அமல்படுத்தப்படும். தற்போது சிலிண்டர் ஒன்றின் விலை ரூ.835 ஆக உள்ளது. சிலிண்டர் விலை குறைப்பின் மூலம் நாளை முதல் சிலிண்டர் விலை ரூ.825 ஆக விற்கப்படும்.

 

Share This Article
Exit mobile version