வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகளின் போராட்டம் தில்லி எல்லையில் 140-வது நாளாகத் தொடர்ந்து வருகிறது.
கூடாரங்களை அமைத்து அமைதியான முறையில் தில்லியில் சிங்கு, டிக்ரி, காஸிப்பூர் எல்லைகளில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகள், போராட்டத்திலிருந்து ஒருபோதும் பின்வாங்கப்போவதில்லை என்பதில் உறுதியாகவுள்ளனர்.
மத்திய அரசு கொண்டுவந்த 3 வேளாண் சட்டங்களை எதிர்த்து தில்லியின் பல்வேறு எல்லைகளில் பஞ்சாப், ஹரியாணா, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
விவசாய சங்கங்கதினர் மத்திய அரசுடனான பலகட்டப் பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்த நிலையில், மீண்டும் பேச்சுவார்த்தைக்குத் தயார் என்று தெரிவித்துள்ளன. இந்நிலையில், வேளாண் சட்டங்களுக்கு எதிராக ஏப்ரல் 21-ம் தேதி தில்லியை நோக்கி பேரணி நடத்த பஞ்சாப் விவசாய சங்கம் திட்டமிட்டுள்ளது.
ஜாலியன் வலாபாகில் உயிரிழந்தவர்களுக்கு பஞ்சாப் மாநிலம் பதின்டா பகுதியில் மரியாதை செலுத்தும் விதமாக கூட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான விவசாயிகள் கலந்துகொண்டனர்.
இதில் பேசிய பாரதிய கிஷான் யூனியன் அமைப்பைச் சேர்ந்த பஞ்சாப் மாநிலத் தலைவர் ஜோகிந்தர் சிங், உரிமைகளை அடையும் வரை போராட்டம் தொடரும் என்று தெரிவித்துள்ளார்.