அனைவரும் மாஸ்க் அணியுங்கள், கொரோனா தடுப்பூசி போடுங்கள்

Pradeepa 1 View
2 Min Read

கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் அனைவரும் மாஸ்க் அணியுமாறும், கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கும்மிடிப்பூண்டியில் திமுக தலைவர் ஸ்டாலின் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பெண்ணின் திருமண உதவித்தொகை திட்டம் இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழகத்தில் கருணாநிதி கொண்டுவந்தார். 10 ஆண்டுகள் எதிர்கட்சியாக இருந்தாலும், கருணாநிதி ஆட்சி காலத்தில் நாங்கள் செய்த சாதனைகள், திட்டங்களை பட்டியலிட்டு காட்ட முடியும். ஆனால், அதிமுக ஆட்சியில் கொண்டுவந்த திட்டங்களை முதல்வர் பழனிசாமி பட்டியலிட முடியுமா?. தற்போது அதிமுக வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கைகள் பெரும்பாலானவை திமுக.,வின் அறிக்கையில் இருந்து காப்பி அடித்துள்ளனர். வாய்க்கு வந்தமாதிரி சில வாக்குறுதிகளை தந்துள்ளார். ஆனால், எது நடக்கும் எது நடக்காது என்ற உண்மை மக்களுக்கு தெரியும்.

2016ஆம் ஆண்டு அதிமுக கூறிய வாக்குறுதிகளின் நிலை என்ன என்பது குறித்து முதல்வர் கூறுவாரா?. பொது இடங்களில் வைபை(wifi) வசதி, 10 லட்சம் வீடுகள் கட்டி தருவது, மோனோ ரயில், அனைவருக்கும் செல்போன், அரசு கேபிள் விலை ரூ.70 ஆக குறைத்தல், ஆவின் பால் லிட்டர் ரூ.25 ஆக குறைத்தல் போன்ற வாக்குறுதிகளை அளித்தனர். இதெல்லாம் செய்தார்களா? 4 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்ய நிதி இல்லை என காரணம் சொல்லிவிட்டு, தேர்தலுக்காக தற்போது தள்ளுபடி செய்வதாக அறிவித்துள்ளார்.

அதிலும் 14 ஆயிரம் கோடி தள்ளுபடி செய்வதாக கூறியிருந்தார். ஆனால் 5 ஆயிரம் கோடி மட்டுமே தள்ளுபடி செய்துள்ளனர். மீதமுள்ள கடனை திமுக ஆட்சிக்கு வந்ததும் தள்ளுபடி செய்யும் என்று கூறினார். நாங்கள் கூறிய வாக்குறுதிகளை லோக்சபா தேர்தலிலேயே கூறியிருந்தோம். அதில், மிகப்பெரிய வெற்றியை பெற்ற போது முதல்வர், நாங்கள் மிட்டாய் கொடுத்து ஏமாற்றுவிட்டதாக கூறினார். இப்போது அவரும் அதே அறிவிப்பை வெளியிட்டுள்ளாரே, அப்போ அல்வா கொடுத்து ஏமாற்ற போகிறாரா?

தற்போது மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், மக்கள் கூட்டங்களில் இருக்கும்போது கண்டிப்பாக மாஸ்க் போடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். நான் வாகனத்தில் இருப்பதால் மாஸ்க் போடவில்லை. நீங்கள் தயவுசெய்து மாஸ்க் அணிந்துகொண்டு பாதுகாப்பாக இருக்க வேண்டும். கொரோனா தடுப்பூசி அனைவரும் போட்டுக்கொள்ளுங்கள்.

முதல்வர் பழனிசாமி கொரோனா குறித்து அஜாக்கிரதையாக இருக்கிறார். எங்கள் ஆட்சியில் கொரோனா பரவல், உயிரிழப்பு இருக்காது என்று கூறினார். கொரோனா நிவாரணமாக நிதியாக திமுக ஆட்சியில் ரூ.4 ஆயிரம் வழங்கப்படும். ஒரு தொகுதியில் அதிமுக வெற்றி பெற்றால் கூட அது பா.ஜ.,வின் வெற்றியாகவே இருக்கும் என்று அவர் பேசினார்.

 

Share This Article
Exit mobile version