ஹைலைட்ஸ்:
- தமிழக சட்டமன்றத் தேர்தலில் அதிமுக 67 இடங்களில் வெற்றிபெற்று, எதிர்கட்சி அந்தஸ்தை பிடித்தது.
- அதிமுக சார்பில் எதிர்க்கட்சி தலைவரை தேர்வு செய்ய அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்.
- தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவராக எடப்பாடி பழனிசாமி தேர்வு.
தமிழக சட்டப்பேரவையின் எதிர்க்கட்சி தலைவர் யார் என்ற கேள்விக்கான பதில் குறித்து அதிமுகவினர் தொடர்ந்து ஆலோசனை கூட்டம் நடத்தி வந்தனர். இந்நிலையில் இன்று தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
தமிழக சட்டமன்றத் தேர்தலில் அதிமுக 67 இடங்களில் வெற்றிபெற்று, எதிர்கட்சி அந்தஸ்தை பிடித்தது. இதனைத் தொடர்ந்து அதிமுக சார்பில் எதிர்க்கட்சி தலைவரை தேர்வு செய்ய அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம், கடந்த 7 ஆம் தேதி மாலை சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைப்பெற்றது. இக்கூட்டத்தில் இறுதி முடிவு எட்டப்படாத நிலையில், இன்று காலை மீண்டும் இக்கூட்டம் நடைப்பெற்றது.
இக்கட்சி அலுவலகத்தில் எதிர்க்கட்சித் தலைவரை தேர்வு செய்வதில் கடும் போட்டி நிலவிவந்தது. சுமார் மூன்று மணி நேரம் ஓபிஎஸ், இபிஎஸ் ஆதரவாளர்களுக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் இறுதியாக தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவராக அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகி உள்ளது.
தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவராக அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டது குறித்த அதிகாரப்பூர்வ கடித்தத்தை அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர்கள் தங்கமணியும், வேலுமணியும் தலைமைச் செயலகம் சென்று சட்ட ப்பேரவை செயலாளர் சீனிவாசனிடம் அளித்தனர்.
தமிழக சட்டப்பேரவையின் எதிர்க்கட்சி தலைவராக அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்ட நிலையில், ஓ. பன்னிர்செல்வம் கூட்டத்திலிருந்து வெளியேறியதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.