தமிழகத்தில் கடந்த இரண்டு நாட்களாக கொரோனா பாதிப்பு வேகம் சற்று குறைந்துள்ளது. ஆனால் கோவையில் கொரோனா பாதிப்பு சற்றும் குறையவில்லை. கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் ஆய்வு நடத்தினார். கொரோனா வார்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மருத்துவர்கள் அணியும் கவச உடை (பிபிஇ கிட் ) அணிந்து நோயாளிகளை நலம் விசாரித்தார்.
கடந்த சில தினங்களாக சென்னையை காட்டிலும், கோவையில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இதனையடுத்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் ஈரோடு மாவட்டம், பெருந்துறை ஐ.ஆர்.டி., மருத்துவ கல்லூரியில் இன்று காலை ஆய்வு மேற்கொண்டார். பின்னர் திருப்பூர் சென்று குமரன் கல்லூரியில் கொரோனா சிகிச்சை மையத்தை ஆய்வு செய்தார். அங்கு கொரோனா சிகிச்சைக்காக கூடுதல்படுக்கை வசதிகளை திறந்து வைத்தார். மேலும் தற்காலிக பணியாளர் நியமனத்திற்கான பணி உத்தரவுகளையும் வழங்கினார்.
அதன் தொடர்ச்சியாக கோவையில் உள்ள இ.எஸ்.ஐ. மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் ஆய்வு செய்தார். இந்தியாவிலேயே முதல் முறையாக கோவையில் உள்ள இ.எஸ்.ஐ மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கவச உடை (பிபிஇ கிட் ) அணிந்து கொரோனா நோய் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளை நேரில் சென்று நலம் விசாரித்தார். தொடர்ந்து, வெளியே வந்த அவரிடம், கொரோனா பாதித்த பகுதிகளில் கிருமி நாசினி தெளிப்பதில்லை என மக்கள் புகார் மனு அளித்தார்கள். அதனை முதல்வர் மு.க.ஸ்டாலின் பெற்று கொண்டார்.
கொரோனா நோயாளிகளை மருத்துவமனைக்கு அழைத்து வர மண்டலத்துக்கு 10 கார் ஆம்புலன்சுகள் வீதம் 50 கார் ஆம்புலன்சுகள் இயக்கப்படும். இத்திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று துவக்கி வைத்தார். இதில், சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம், உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன், கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி சித்திக், மாவட்ட ஆட்சியர் நாகராஜன், மாநகராட்சி ஆணையாளர் குமாரவேல் பாண்டியன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
பின்னர் இன்று மாலை 4:40 மணிக்கு கோவை கலெக்டர் அலுவலகத்தில் கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்ட கலெக்டர்களுடன் ஆலோசனை நடத்துகிறார். இதனைத்தொடர்ந்து மாலை 6:30 மணிக்கு முதல்வர் பத்திரிகையாளர்களை சந்திக்க இருக்கிறார்.