மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் 98-வது பிறந்த நாளை ஒட்டி, கொரோனா நிவாரணம் இரண்டாவது தவணை ரூ.2,000, 14 வகையான மளிகைப் பொருட்கள் உள்ளிட்ட 5 திட்டங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.
தலைமைச் செயலகத்தில் இன்று காலை 10.30 மணியளவில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், கொரோனா நிவாரணத் தொகை இரண்டாவது தவணை ரூ.2 ஆயிரத்துடன், 14 வகை மளிகைப் பொருள்களான கோதுமை மாவு, ரவை தலா 1 கிலோ, சா்க்கரை, உளுத்தம் பருப்பு தலா அரை கிலோ, புளி, உப்பு, கடலை பருப்பு தலா கால் கிலோ, கடுகு, சீரகம், மஞ்சள் தூள், மிளகாய் தூள் தலா 100 கிராம், டீதூள் 100 கிராம் பொட்டலம் 2, துணி சோப்பு, குளியல் சோப்பு தலா 1 ஆகிய பொருட்கள் அடங்கிய பைகளை, அரிசி அட்டைதாரா்களுக்கு வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.
இதனைதொடர்ந்து ‘உங்கள் தொகுதியில் முதல்வர்’ திட்ட பயனாளிகள் 10 பேருக்கும் அரசு நலதிட்ட உதவிகளை முதல்வர் வழங்கினார்.
இதனைத் அடுத்து 12,959 கோயில்களில் மாத சம்பளமின்றி பணிபுரியும் 14 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அர்ச்சகர்கள், பட்டாச்சாரியார்கள், பூசாரிகள் மற்றும் பணியாளர்களுக்கு ரூ. 4,000 கொரோனா நிவாரண உதவித்தொகை, 10 கிலோ அரிசி, 13 வகை மளிகைப் பொருட்கள் வழங்கும் திட்டத்தையும் தொடங்கி வைத்தார்.
கொரோனா நோய் தொற்றால் மரணம் அடைந்த முன்களப் பணியாளா்களான பத்திரிகையாளா்கள் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம், மருத்துவா், மருத்துவப் பணியாளா், காவலா், நீதிபதிகள் ஆகியோரின் குடும்பத்துக்கு ரூ. 25 லட்சம், நிவாரணத் தொகை வழங்கும் திட்டத்தையும் முதல்வா் ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.
மேலும் கலைஞர் கருணாநிதியின் பிறந்த நாளை ஒட்டி, மாவட்டந்தோறும் ஆயிரம் மரக்கன்றுகள் வீதம் 38,000 மரக்கன்றுகள் நடும் பணியையும் தொடங்கி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.