தேசிய மருத்துவர்கள் தினத்தை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மருத்துவர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்தியாவின் புகழ்பெற்ற மருத்துவரும் மேற்கு வங்க முன்னாள் முதலமைச்சருமான பிதான் சந்திர ராய் நினைவை போற்றும் வகையில் ஜூலை 1ஆம் தேதி மருத்துவர்கள் தினமாக கடைபிடிக்கப்படுகிறது.
இதையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மருத்துவர்களுக்கு விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் கொரோனா பேரிடர் காலத்தில் வெள்ளை உடுப்பு அணிந்து ராணுவம் போல் மருத்துவர்கள் அல்லும் பகலும் பணியாற்றுவதாக தெரிவித்துள்ளார்.
கொரோனா இரண்டாம் அலையை கட்டுக்குள் கொண்டுவந்த மருத்துவர்களுக்கு இந்த நன்னாளில் வாழ்த்துக்களை தெரிவிப்பதாக அவர் கூறியுள்ளார். தமிழ்நாட்டின் மருத்துவ கட்டமைப்பு மேலும் வலிமை பெற அரசு மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு மருத்துவர்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
மக்களை காக்கும் மகத்தான பணியை நீங்கள் தொடருங்கள் இந்த அரசு உங்களை பாதுகாக்கும் முன்கள வீரராக செயலாற்றும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதனிடையே மருத்துவர்கள் தினத்தை முன்னிட்டு சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகை ஆரஞ்சு நிற விளக்குகளால் ஒளிரவிடப்பட்டுள்ளது.