படித்த இளைஞர்கள் தொழில் முனைவோராக உருவாக்கிட சுயவேலை வாய்ப்பு திட்டங்களை விரிவுபடுத்துமாறு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொழில் துறை அதிகாரிகளிடம் அறிவுறுத்தியுள்ளார். தொழில் நிறுவனங்களின் நலனை மேம்படுத்துவது குறித்தும், அடுத்த 10 ஆண்டுகளுக்கான தொலைநோக்கு திட்டங்கள் குறித்தும் இன்று தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தொழில் துறை ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
இந்த நிதி ஆண்டில் தொழில் துறை வரவு செலவு திட்ட முதலீடு மானிய ஒதுக்கீட்டை ஒரு மாதத்திற்குள் உடனடியாக விடுவிக்கப்பட்ட வேண்டும் என்றும், நிர்ணயிக்கப்பட்ட முன்னுரிமை இலக்குகளை தவறாமல் எய்திட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் முதலமைச்சர் வற்புறுத்தினர். மேலும் சுய வேலை வாய்ப்பு திட்டங்கள் பயனாளிகளுக்கு உரிய பிரதிநிதித்துவதுடன் வழங்கப்பட வேண்டும் என்றும் கோரினார். தமிழகம் தொழில் துறையில் நாட்டின் முன்னோடி மாநிலமாக விளங்க தொழில் துறையை மேலும் வலுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொண்டார்.
மேலும் தகவல் தொழில் நுட்பவியல் துறை ஆய்வு கூட்டம் முதலமைச்சர் தலைமையில் இன்று நடைபெற்றது இக்கூட்டத்தில் முதலமைச்சர் உதவி மையம் வாயிலாக உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் விரைந்து தீர்வு காண்பது E-சேவை உள்ளிட்ட மின் தொழில் நுட்பவியல் சேவைகளை அதிகப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. எல் கார்ட் நிறுவனம் அமைத்துள்ள எட்டு தகவல் தொழில்நுட்ப பூங்காக்கள் மற்றும் அரசுத் துறைகளில் தகவல் தொழில்நுட்ப உள்கட்டமைப்புகளை மேம்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை எடுக்குமாறு முதலமைச்சர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
அரசுத் துறைகளில் கணினித்தமிழ் வளர்ச்சி, பாரத் நெட் மற்றும் தமிழ் நெட் உள்ளிட்ட திட்டங்களை விரைந்து செயல்படுத்த வேண்டும் என அதிகாரிகளுக்கு முதலமைச்சர் உத்தரவிட்டார். அரசுத் துறைகளின் சேவைகள், மக்கள் அனைவருக்கும் விரைந்து சென்று அடைந்திட தொழில்நுட்பத் துறையை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என அதிகாரிகளை கேட்டுக்கொண்டார்.