செட்டிநாடு சிக்கன் பிரியாணி

Vijaykumar 3 Views
5 Min Read

இப்போது இந்தியவில் ஆன்லைனில் ஆர்டர் செய்து சாப்பிடும் உணவுப் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ள உணவு பிரியாணி.
பிரியாணி பண்டிகை கால உணவாகக் கருதப்பட்ட பிரியாணி இப்போது அன்றாட உணவுகளில் ஒன்றாகி விட்டது.
வீட்டில் சமைப்பதைவிட ஹோட்டல் பிரியாணி வகைகளுக்கு எப்போதும் மவுசு அதிகம்.

அதிலும், `இந்த இடத்தில், இந்த பிரியாணியின் சுவையே தனி’ என்கிற வகையில் பிரியாணிக்குத் தனி முத்திரையும் அளிக்கப்பட்டு வருகிறது. அப்படிப்பட்ட பிரியாணி வகைகளுடன் துணை உணவுகளையும் வீட்டிலேயே சமைக்கும்விதமாக எளிய ரெசிப்பிகள் இதோ..!

செட்டிநாடு சிக்கன் பிரியாணி

தேவையானவை:

சிக்கன் துண்டுகள்                           – ஒரு கிலோ
சீரக சம்பா அரிசி                              – ஒரு கிலோ
மிளகு                                                       – ஒரு டீஸ்பூன்
காய்ந்த மிளகாய்                              – 8
சீரகம்                                                       – ஒரு டீஸ்பூன்
பட்டை                                                      – சிறிய துண்டு
ஏலக்காய்                                               – 4
கிராம்பு                                                   – 5
முந்திரி                                                    – 25 கிராம்
கசகசா                                                    – ஒரு டீஸ்பூன்
தேங்காய்ப்பால்                                 – 3 கப்
வெங்காயம், தக்காளி                   – தலா கால் கிலோ (பொடியாக நறுக்கவும்)
எலுமிச்சைப் பழம்                            – 2 (சாறு பிழியவும்)
நெய்                                                          – 100 கிராம்
எண்ணெய்                                            – 100 மில்லி
சோம்பு                                                    – அரை டீஸ்பூன்
புதினா                                                    – ஒரு கட்டு (ஆயவும்)
கொத்தமல்லித்தழை                     – ஒரு கட்டு (பொடியாக நறுக்கவும்)
பச்சை மிளகாய்                               – 4 (நீளவாக்கில் நறுக்கவும்)
இஞ்சி – பூண்டு விழுது                   – 2 டீஸ்பூன்
உப்பு                                                         – தேவையான அளவு

தாளிக்க:

பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை – தேவையான அளவு

செய்முறை:

  • அரிசியை அரை மணி நேரம் ஊறவிடவும். சிறிதளவு புதினா, கொத்தமல்லித்தழையைத் தனியாக எடுத்து வைக்கவும்.
  • மிளகுடன் காய்ந்த மிளகாய், சீரகம், பட்டை, ஏலக்காய், கிராம்பு, முந்திரி, கசகசா, சோம்பு ஆகியவற்றை மிக்ஸியில் சேர்த்துத் தண்ணீர் தெளித்து விழுதாக அரைத்தெடுக்கவும்.
  • அடிகனமான பாத்திரத்தில் எண்ணெய்விட்டு சூடாக்கி பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை ஆகியவற்றைச் சேர்த்துத் தாளிக்கவும்.
  • அதனுடன் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்துப் பொன்னிறமாக வதக்கவும். பிறகு இஞ்சி – பூண்டு விழுது, அரைத்த விழுது, தக்காளி, உப்பு சேர்த்து வதக்கவும். அதனுடன் சிக்கன், புதினா, கொத்தமல்லித்தழை சேர்த்து மசாலா போல வதக்கவும்.
  • அதனுடன் 3 கப் தேங்காய்ப்பால், ஒன்றரை கப் தண்ணீர் சேர்த்து வேகவிடவும். பிறகு, அரிசி சேர்த்து முக்கால் வேக்காடு பதத்தில் வேகவிடவும்.
  • மேலே நெய், சிறிதளவு கொத்தமல்லித்தழை, புதினா ஆகியவற்றைச் சேர்த்து இறக்கி மூடி போடவும். தவாவைச் சூடாக்கி அதன் மீது பிரியாணி பாத்திரத்தை வைத்து சிறு தீயில் 15 நிமிடங்கள் வரை `தம்’ போடவும்.
  • பிறகு மேலே சிறிதளவு கொத்தமல்லித்தழைத் தூவி இறக்கி, எலுமிச்சைப்பழச் சாறு சேர்த்துக் கலந்து சூடாகப் பரிமாறவும்.
Share This Article
Exit mobile version