சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் இலவச WiFi வசதி தொடங்க உள்ளதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக தனிப்பெருமான்மையில் வெற்றிப்பெற்று ஆட்சியமைத்தது. இந்நிலையில் சென்னை மாநகரை நவீனப்படுத்தும் ‘சிங்கார சென்னை 2.0′ திட்டம் செயல்படுத்தப்படும் என கூறப்பட்டிருந்தது. அதன்படி, தற்போது தொழில்நுட்ப வசதி பெருகிவிட்ட நிலையில் மக்கள் பயன்பாட்டிற்காக இலவச வைஃபை சேவையை தொடங்க உள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்து இருக்கிறது.
இலவச வைஃபை சேவைக்காக சென்னை மெரினா (Chennai Marina) கடற்கரை, அசோக்பில்லர், நடேசன் பூங்கா, தி.நகர் உள்ளிட்ட 49 இடங்களில் WI-FI ஸ்மார்ட் கம்பங்கள் நடப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட் கம்பங்கள் மூலம் மக்கள் தங்களது செல்போன் உள்ளிட்ட சாதனங்களில் 30 நிமிடம் வரை இலவச WI-FI (Free WIFI) சேவையை பெறலாம் என கூறப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியதாவது, ‘சென்னை மாநகராட்சியில் சீர்மிகு நகரத் திட்டத்தின் கீழ் பல்வேறு திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி, சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டிட வளாகத்தில் ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையம் அமைப்பதன் முக்கிய நோக்கமே மாநகரின் பல்வேறு பகுதிகளில் நிறுவப்பட்டுள்ள திட்டப் பணிகளை ஒருங்கிணைத்து நிர்வாகச் செயல்திறனை மேம்படுத்துவது தான்.
சென்னை மாநகரின் முக்கிய இடங்களைக் கண்காணித்தல் மற்றும் பேரிடர் மேலாண்மை குறித்து தகவல் கருவிகள் மூலம் அறிதல், மழை பொழிதல் அளவைக் கண்டறிதல், வெள்ளப்பெருக்கு ஏற்படும் இடங்களில் நீர் அளவைக் கண்டறிதல், அவசர காலத்தில் கட்டுப்பாட்டு மையத்துடன் தொடர்பு கொள்ளுதல், திடக்கழிவு அகற்றும் பணிகளைக் கண்காணிக்க கேமரா பொறுத்துதல் மற்றும் இதனைச் சார்ந்த தகவல்கள் பெறப்பட்டு அதன் மீது தகுந்த நடவடிக்கை எடுத்தல் போன்ற பல்வேறு பணிகள் இணையவழி சாதனங்களின் மூலம் ரிப்பன் கட்டிடத்தில் உள்ள ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்திலிருந்து கண்காணிக்கப்படுகின்றன.
இலவச வைஃபை சேவைக்காக சென்னை மாநகரில் பல்வேறு இடங்களில் ஸ்மார்ட் கம்பங்கள் நிறுவப்பட்டுள்ளன. இந்த ஸ்மார்ட் கம்பங்களின் மூலம் கிடைக்கும் வைஃபை இணைப்பை பொதுமக்கள் 30 நிமிடங்களுக்கு இலவசமாகப் பயன்படுத்திக் கொள்ளலாம். பொதுமக்கள் தங்கள் செல்போனில் இலவச வைஃபை பெறுவதற்கு செல்போன் எண்ணைப் பதிவு செய்து OTP மூலம் இச்சேவையைப் பெற்றுக்கொள்ளலாம்.
மேலும், பொதுமக்கள் இலவச WI-FI இணைப்பு அமைக்கப்பட்டுள்ள 49 ஸ்மார்ட் கம்பங்கள் உள்ள இடங்களை பெருநகர சென்னை மாநகராட்சியின் https://chennaicorporation.gov.in/gcc/images/WiFiSmartPol.pdf இணையதள இணைப்பைப் பயன்படுத்தித் தெரிந்துகொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது.