அடுத்த 24 மணி நேரத்தில் 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக 13 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.
ஜனவரி 13 அன்று கடலோர மாவட்டங்களான ராமநாதபுரம், கடலூர் ஆகிய பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும் தஞ்சாவூர், திருவருர், நாகப்பட்டினம் , சிவகங்கை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, திருநெல்வேலி, விருதுநகர், தூத்துக்குடி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.
மற்ற மாவட்டங்களிலும் மற்றும் புதுவையில் பெரும்பான்மையான இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. ஜனவரி 14,15,16 ஆகிய தேதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் இருக்கும். ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது.
கேரள கடலோர பகுதி மற்றும் லச்சத்தீவு, மாலத்தீவு ஆகிய பகுதிகளிலும் மிக பலத்த காற்று வீசக்கூடும். அதனால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது.