கடந்த ஆண்டு நவம்பர் 26 ஆம் தேதி முதல் மத்திய அரசு விவசாயிகளுக்கு எதிராக கொண்டு வந்த 3 சட்டங்களை திரும்ப பெற கோரி பல்வேறு மாநிலத்தை சார்த்த விவசாயிகள் 6 மாதங்களாக டெல்லி எல்லையில் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
விவசாயிகளுடன் மத்திய அரசு நடத்திய 11 வது கட்ட பேச்சுவார்த்தையில் எந்தவித உடன்படும் ஏற்படாத நிலையில் டிராக்டர் பேரணி உள்ளிட்ட போராட்டங்களையும் நடத்திய விவசாயிகள் தங்கள் போராட்டம் தொடங்கி 6 மாதங்கள் ஆகிறது என்பதை நினைவு படுத்தும் விதமாக இன்று(புதன்கிழமை) நாடு தழுவிய கருப்பு தின போராட்டம் நடத்துவதாக அறிவித்துள்ளனர்.
40 விவசாய சங்கங்கள் சேர்ந்து நடத்தும் இந்த போராட்டத்திற்கு காங்கிரஸ், திமுக உள்ளிட்ட 13 எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. கருப்பு தின போராட்டத்தில் பங்கேற்பதற்காக ஹரியானா, பஞ்சாப், சங்குரூர், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள விவசாயிகள் டெல்லியை நோக்கி வந்து உள்ளனர்.
இந்த போராட்டத்தால் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து விடுமோ என்று ஹரியானா பாஜக அரசு கவலை தெரிவித்துள்ளது. டெல்லி எல்லையில் நடைபெறும் இந்த போராட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளான சமூக இடைவெளி, கிருமி நாசுனி தெளித்தல், முகக்கவசம் அணிதல் போன்றவை பின்பற்றப்படும் என்று விவசாயிகள் உறுதி அளித்துள்ளனர்.
விவசாயிகள் தங்கள் போராட்டங்களை தொடங்கி 6 மாதங்களை கடந்து விட்ட நிலையில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் விவசாயிகளின் நியாமான கோரிக்கைகளை ஏற்று 3 புதிய வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெற வேண்டும் என மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.
வேளாண் சட்டங்கள் குறித்து விவசாயிகளுக்கு திமுக அளித்துள்ள வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும். 3 புதிய வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்படும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் கூறியுள்ளார்.