புதிய முறையில் தேர்வுகளை நடத்த சிபிஎஸ்சி முடிவு

Pradeepa 11 Views
2 Min Read

சிபிஎஸ்சி 10 மற்றும் 12 வகுப்பு மாணவர்களுக்கு இரண்டு பொதுத் தேர்வுகளை நடத்த திட்டமிட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கல்வி நிலையங்கள் மூடப்பட்டு ஆன்லைன் வாயிலாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. அடுத்தடுத்த அலை காரணமாக பள்ளிகளை திறப்பதிலும், தேர்வு நடத்துவதிலும் சிக்கல் நிடித்து வருகிறது.

பொது தேர்வை பொறுத்தவரை கடந்த ஆண்டு சில படங்களுக்கும், இந்த ஆண்டு அனைத்து பாடங்களுக்கும் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் நடப்பு கல்வியாண்டில் புதிய முறையில் தேர்வுகளை நடத்த சிபிஎஸ்சி எனப்படும் மத்திய இடைநிலை கல்வி வாரியம் முடிவு செய்துள்ளது. TERM 1 மற்றும் TERM 2 என இரண்டு பருவ தேர்வுகள் நடத்தப்படும் என்றும், அதற்கு ஏற்ப பாடத்திட்டங்கள் இரண்டாகப் பிரிக்கப்படும் என்றும் சிபிஎஸ்சி உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

90 நிமிடங்கள் அடங்கிய தேர்வுகள் இருக்கும் என்றும் அதற்கான கேள்வி தாள் மற்றும் மதிப்பீடு முறை குறித்து அந்தந்த பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நவம்பர், டிசம்பர் மாதங்களில் முதல் தேர்வும், அடுத்த ஆண்டு மார்ச், ஏப்ரல் மாதங்களில் அடுத்த தேர்வும் நடத்த திட்டமிடப்பட்டுள்ள சிபிஎஸ்இ இரண்டு தேர்வுகளின் அடிப்படையில் கல்வியாண்டின் இறுதியில் மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்க முடிவு செய்துள்ளது.

சரியான பதிலைத் தேர்வு செய்யும் கேள்விகள் முதல் பருவத்தேர்வில் இருக்கும் என்றும் மாணவர்களின் திறமைகளை மதிப்பிடும் வகையில் பள்ளி அளவிலான உள் மதிப்பீட்டுக்கு அதிக முக்கியத்துவம் தரப்படும் வகையில் கேள்விகள் இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. சிபிஎஸ்சி இணையதளத்தில் மாணவரின் மதிப்பிட்டு மதிப்பெண்களை பள்ளிகள் பதிவு செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேபோல் 9 மற்றும் 10 வகுப்பு மாணவர்களுக்கு மூன்று இடைநிலை தேர்வுகளுடன் பாடங்களை கவனிக்கும் திறமையும் பரிசோதிக்கப்படும்.

11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஒவ்வொரு பாட தலைப்புக்கு பிறகும் பாடத்தை கவனிக்கும் திறன், செய்முறைத்தேர்வு போன்றவற்றுக்கு பள்ளி அளவில் மதிப்பீடு செய்யப்படும் என கூறப்பட்டுள்ளது. மாதிரி மதிப்பிடல் முறை கேள்வி வங்கி ஆசிரியர்களுக்கான பயிற்சி போன்றவற்றுக்கான வழிமுறைகள் ஆகிய தகவல்கள் பள்ளிக்கு வழங்கப்படும் என கூறியுள்ள சிபிஎஸ்சி மறு அறிவிப்பு வரும் வரை ஆன்லைன் வாயிலாகவே வகுப்புகள் நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளது.

Share This Article
Exit mobile version