கொரோனா இரண்டாவது அலையால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் படுக்கைகள் மற்றும் ஆக்சிஜன் இல்லாமல் பெரும் அவதிப்பட்டு வந்தார்கள். மேலும் இந்நோய் தொற்றுக்கு சிகிச்சை அளிக்க போதுமான பண வசதி இல்லாமல் மக்கள் பெரும் இன்னல்களை சந்தித்து வருகிறார்கள்.
இந்நிலையில், மக்கள் இந்நோய் தொற்றில் இருந்து மீண்டு வருவதற்காக பொதுத்துறை வங்கிகள் கடன் திட்டத்தை அறிவித்து இருக்கிறது. அதன்படி, கொரோனா சிகிச்சைக்கு 5 லட்சம் வரை தனிநபர்கடன் வழங்கப்படும் என்று பொதுத்துறை வங்கிகள் அறிவித்து இருக்கிறது.
நாட்டின் பொதுத்துறை வங்கிகளான எஸ்பிஐ, இந்தியன் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, கனரா வங்கி உள்ளிட்ட வங்கிகள் தனிநபர் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் கொரோனா சிகிச்சைக்காக 5 லட்சம் வரை பிணையற்ற (ஜாமீன் அல்லது சொத்து இல்லாவிட்டாலும்) கடன்களை வழங்க தயாராக உள்ளது. மேலும் இக்கடனை திருப்பிச் செலுத்த 5 ஆண்டுகள் கால அவகாசம் கொடுப்பதாக வங்கிகள் தெரிவித்து இருக்கிறது.
எஸ்பிஐ வங்கி மட்டும் கடன் தொகைக்கான வட்டி விகிதத்தை அறிவித்துள்ளது. அதாவது சிகிச்சைக்காக வழங்கப்படும் கடன் தொகைக்கு ஆண்டுக்கு 8.5% வட்டி வசூலிக்கப்படும் என எஸ்பிஐ அறிவித்துள்ளது. மற்ற வங்கிகள் தங்கள் வட்டி விகிதத்தை தீர்மானிக்கவில்லை.
மேலும் கொரோனா சிகிச்சை மையங்கள், பரிசோதனைக் கூடங்கள், தடுப்பூசி இறக்குமதியாளர்கள், ஆக்சிஜன் மற்றும் வெண்டிலேட்டர் உற்பத்தியாளர்கள் போன்றோர்களுக்கும் கடன் உதவி வழங்கப்படும் என்று வங்கிகள் தெரிவித்து இருக்கிறது.