மனிதநேய மக்கள் கட்சி போட்டியிடும் தொகுதிகள் இன்று அறிவிப்பு
திமுக கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சி போட்டியிடும் தொகுதிகள் இன்று உறுதியாகி உள்ளது. திமுக கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சி(மமக) இரு தொகுதிகளிலும் அதிமுகவுடன் நேரடியாக மோதுகிறது.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்தநிலையில் திமுக கூட்டணியில் எம்.ஹெச்.ஜவாஹிருல்லாவின் மனிதநேய மக்கள் கட்சி இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறது.
இதில், ஒரு தொகுதியில் உதயசூரியன் சின்னத்திலும், மற்றொரு தொகுதியில் தனிச்சின்னத்தில் போட்டியிடுவதாக இன்று ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
இந்நிலையில், மனிதநேய மக்கள் கட்சி, தஞ்சை மாவட்டம் பாபநாசம், திருச்சி மாவட்டம் மணப்பாறை தொகுதிகளில் போட்டியிடுவதென இரு கட்சிகளும் ஆலோசனை செய்து முடிவு செய்துள்ளது.
தொகுதி ஒப்பந்தத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம்.ஹெச்.ஜவாஹிருல்லாவும் இன்று அண்ணா அறிவாலயத்தில் கையெழுத்திட்டுக்கொண்டனர்.
இதற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம்.ஹெச்.ஜவாஹிருல்லா, ”தலைமை நிர்வாக குழு மிக விரைவில் கூடி வேட்பாளர்கள் யார் என்பதை அறிவிப்போம். எங்களுக்கு திருப்திகரமான தொகுதிகள் கிடைத்திருக்கின்றன. கூட்டணியில் உள்ள அனைத்துக் கட்சிகளின் வேட்பாளர்களும் அமோக வெற்றி பெற்று தருவோம். எதிர்க்கட்சி இல்லாத புதிய வரலாறு இம்முறை உருவாகும். நாங்கள் இழந்த உரிமைகளை மீட்டெடுக்கவும், மக்கள் நலனுக்காகவும், சமூகநீதியின் தொட்டில்தான் தமிழகம் என்பதை நிலைநிறுத்த தமிழக மக்கள் நல்லதொரு தீர்ப்பை வழங்குவார்கள்” எனறு கூறினார்.
மேலும் மணப்பாறை தொகுதியில் அதிமுக சார்பாக தற்போதைய எம்எல்ஏ இரா.சந்திரசேகரும், பாபநாசம் தொகுதியில் பாபநாசம் மேற்கு ஒன்றிய அதிமுக செயலாளர் கோபிநாதனும் போட்டியிடுகிறார்கள். எனவே, இரு தொகுதிகளிலும் அதிமுக – மமக இடையே நேரடி போட்டி நிலவப்போகிறது .