ஐம்பெரும் காப்பியங்கள்

sowmiya p 51 Views
11 Min Read

முன்னுரை

  • காப்பியம் என்பது இலக்கிய வடிவங்களில் ஒன்றாகும். சிலப்பதிகாரம்⸴ மணிமேகலை⸴ குண்டலகேசி⸴ வளையாபதி⸴ சீவக சிந்தாமணி என்னும் காப்பியங்கள் ஒருங்கே ஐம்பெருங் காப்பியங்கள் என அறியப்படுகின்றன.
  • இவற்றுள் சிலப்பதிகாரமும்⸴ மணிமேகலையும் சங்க மருவிய காலத்தில் தோன்றிய காப்பியங்களாக ஏனையவை சோழர் காலத்தில் தோன்றியவையாகும்.
  • தமிழில் தோன்றிய காப்பியங்களயாக சிலப்பதிகாரம் மற்றும் மணிமேகலை காணப்பட ஏனையவை வேற்று மொழிகளைத் தழுவிய தமிழாக்கங்களாகவுள்ளன. இக்கட்டுரையில் ஐம்பெரும் காப்பியங்கள் பற்றி காண்போம்.

ஐம்பெரும் காப்பியங்களும் அதன் ஆசிரியர்களும்

  • ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றாகிய சிலப்பதிகாரம் ஆனது சேர நாட்டவரான இளங்கோவடிகளினால் கி.பி இரண்டாம் நூற்றாண்டில் எழுதப்பட்டது.
  • மணிமேகலை நூலின் ஆசிரியர் சீத்தலைச் சாத்தனார் ஆவார்.
  • குண்டலகேசி என்னும் நூலானது திருத்தக்கதேவரினால் எழுதப்பட்டதாகும்.
  • ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான வளையாபதி நூலை எழுதிய ஆசிரியர் பெயர் இன்று வரை அறியப்படவில்லை.
  • குண்டலகேசி நூலை எழுதிய ஆசிரியர் நாதகுத்தனார் ஆவார்.
  • ஐம்பெரும் காப்பியங்களின் அணிகலப் பெயர்கள்
  • சிலப்பதிகாரத்தில் சிலம்பு என்பது மகளிர் அணியும் காலணியைக் குறிக்கின்றது.
  • மணிமேகலை என்பது மகளிர் இடுப்பில் அணியும் அணி ஆகும்.
  • குண்டலகேசியில் குண்டலம் என்பது பெண்கள் அணியும் காது வளையம் ஆகும்.
  • வளையாபதி வளையல் அணிந்த பெண் வளையாபதி ஆகும்.
  • சீவக சிந்தாமணியில் சிந்தாமணி என்பது அரசன் முடியில் பதிக்கப்படும் மணிக் கல்லாகும்.

இரட்டைக் காப்பியங்கள்

  • சிலப்பதிகாரம் மற்றும் மணிமேகலை ஆகிய இரண்டு காப்பியங்களும் இரட்டை காப்பியங்கள் என அழைக்கப்படுகின்றன. இவ்விரு காப்பியங்களும் தமிழ்நாட்டைக் கதைக் களமாக கொண்டவையாகும்.
  • சிலப்பதிகாரமானது கோவலன் எனும் வணிகன் மற்றும் அவன் மனைவி கண்ணகி ஆகியோரது கதையைக் கூறுவதாகும். இக் காப்பியத்தில் கோவலனுடன் தொடர்பு கொள்ளும் மாதவி இன்னோர் கதாபாத்திரமாகும்.
  • மணிமேகலையின் கதைக்களன்⸴ கதைமாந்தர்⸴ கதை நடக்கும் காலம் ஆகியவை சிலப்பதிகாரத்தை ஒத்ததாகும். இதனால் இவை இரண்டும் இரட்டைக் காப்பியங்கள் எனப்படுகின்றன.
  • சிலப்பதிகாரத்தில் வரும் மாதவியின் மகள் மணிமேகலை ஆகும். இவளே மணிமேகலைக் காப்பியத்தின் நாயகியாகும்.
  • மணிமேகலை புத்தத் துறவியாகி பசிப்பிணி போக்குவதையே தன் கடமையாகக் கொண்டு வாழ்ந்ததால் மறைவிற்குப் பின் தெய்வமாய்ப் போற்றப்பட்டாள்.

ஐம்பெரும் காப்பியங்களில் நூற் சிறப்பு

  • தமிழில் தோன்றிய முதல் காப்பியம் என்ற சிறப்பை சிலப்பதிகாரம் பெறுகின்றது. பெண் காப்பியத் தலைவி ஆகும். மன்னருக்கு நிகராக வணிகர் கருதப்படுதலை சிலப்பதிகாரத்தில் காணலாம்.
  • மணிமேகலை காப்பியமானது உணவிடும் உன்னதப் பணியினை கூறுகின்றது. சீவகசிந்தாமணியானது ஓர் மண நூலாகும்.
  • வளையாபதி தமிழன்னையின் வளையல் ஆகும். குண்டலகேசியின் கதைப் போக்கும் மணிமேகலை காப்பியத்தினை ஒத்ததாகவே உள்ளது.

ஐம்பெருங் காப்பியங்கள்

அறம், பொருள், இன்பம் , வீடு என்னும் நால்வகை உறுதிப் பொருள்கள் அடங்கியவை ‘காப்பியம்’ எனப்பட்டன.
இந்த விதிமுறைகளை முழுமையாகக் கொண்ட

  • சிலப்பதிகாரம் (Silappadhikaram)
  • மணிமேகலை (Manimekalai)
  • சீவக சிந்தாமணி (Seevaga Chintamani)
  • வளையாபதி (Valaiyapathi)
  • குண்டலகேசி (Kundalakesi)

ஆகிய ஐந்தினையும் தமிழில் தோன்றிய ஐம்பெருங் காப்பியங்கள் என்பர்.

இவ் ஐந்தனுள் சிறப்புத் தகுதி வாய்ந்தவை சிலப்பதிகாரமும், மணிமேகலையும் ஆகும். இவை இரண்டையும் இரட்டைக் காப்பியங்கள் என்று குறிப்பிடுவார்கள். இவ்விரண்டும் கதை நிகழ்ச்சியில் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவை. மேலும் சமகாலத்தில் தோன்றியவை. ஏனையவை சோழர் காலத்தில் தோன்றியவையாகும்.

1 ) . சிலப்பதிகாரம்

சிலப்பதிகாரம் ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்று. இது சேரன் செங்குட்டுவன் சகோதரர் இளங்கோஅடிகள் இயற்றிய காப்பியமாகும். அரச பதவியை உதறிவிட்டு துறவறம் பூண்டு வாழ்ந்தவர் இளங்கோ அடிகள் கோவலன், கண்ணகி,மாதவி இக் கதையில் முக்கிய பாத்திரங்கள்.கண்ணகி கற்பு நெறி தவறாமல் வாழும் பத்தினி .மாதவி பேரழகி. ஆடற்கலையின் ஆழமுணர்ந்தவள். கணிகையர் குலத்தோன்றலெனினும் கற்புநெறி வழுவாமல் கோவலனுக்கென்றே வாழ்ந்தவள். மணிமேகலையின் தாய். கோவலன் தனது செல்வம் அனைத்தையும் முறை இல்லாமல் செலவழித்து கடைசியில் மிஞ்சிய தனது மனைவியின் காற்சிலம்பை விற்க மதுரைக்கு வருகிறான். கடைவீதியில் அதை விற்க முயலும் போது அரண்மனைக் காவலர்களால் அரசியின் சிலம்பை திருடியதாக குற்றம் சாட்டப்பட்டு மன்னர் முன் விசாரணை கைதியாக நிற்க வைக்கப்படுகிறான். மன்னன் கோவலன் விற்க முயன்ற சிலம்பு அரசியின் சிலம்பு என குற்றம் சாட்ட,கோவலன் அது தனது மனைவி கண்ணகி யின் காற்சிலம்பு என மறுக்கிறான். ஆனால் மன்னனின் தவறான தீர்ப்பால் கொலை செய்யப்படுகிறான்.கணவன் கொலையுண்ட செய்தி கேட்டு கண்ணகி கோபாவவேசமாக அரசனின் அரச சபைக்கு வருகிறாள்.

  • மன்னனின் தீர்ப்பு தவறு என நீதி கேட்கிறாள்.மன்னன் தனது மனைவியின் காற்சிலம்பில் உள்ளது முத்து என கூற தனது சிலம்பில் உள்ளது மாணிக்க பரல்கள் என சிலம்பை வீசி உடைத்து நிருபிக்கிறாள்.
  • நீதி தவறிய மன்னன் அக்கணமே உயிர் விடுகிறான்.அரசியும் உடன் உயிர் விடுகிறாள்.கண்ணகி மதுரை நகரமே முதியவர்,குழந்தைகள்,பெண்கள் தவிர மற்ற அனைத்தும் (மதுரை நகரமே) தீக்கிரையாக சபிக்கிறாள்.

2 ) மணிமேகலை

மணிமேகலை ஐம்பெரும் காப்பியங்களுள் ஒன்று. மணிமேகலையின் கதைக்களன், கதை மாந்தர், கதை நடக்கும் காலம் ஆகியவை சிலப்பதிகாரத்தை ஒத்து இருப்பதால் மணிமேகலையும் சிலப்பதிகாரமும் இரட்டைக் காப்பியங்கள் என்று அழைக்கப்படுகின்றன. இக்காப்பியத்தின் நாயகி மணிமேகலை, சிலப்பதிகாரத்தில் வரும் மாதவியின் மகளாவாள். கோவலன் மற்றும் கண்ணகியின் சோக மறைவிற்கு பிறகு, மாதவி பொது வாழ்விலிருந்தும் கலைப் பணியிலிருந்தும் தன்னை விடுவித்துக் கொண்டாள். தான் கடந்த காலத்தில் வாழ்ந்த முறையையும் நினைவுகளையும் மாற்ற நினைத்த மாதவி, அவற்றின் சுவடுகளும் உலக சுகங்களும் இன்றி மணிமேகலையை வளர்க்க எண்ணி புத்த சமய மடம் ஒன்றில் அவளைச் சேர்த்து வளர்த்தாள்.

  • அவள் வாழ்ந்து வந்த நாட்டு இளவரசன் மணிமேகலையின் மேல் காதல் கொள்ளவே, அவனிடமிருந்து விடுபட்டு மணிபல்லவத் தீவுக்குச் சென்று புத்த சமயத் துறவியானாள். அங்கு அவளுக்கு பசிப்பிணி போக்கும் ‘அட்சய பாத்திரம்’ கிடைத்தது. அன்று முதல் மக்களின் பசியைப் போக்குவதையே தன் கடமையாகக் கொண்டு வாழ்ந்த மணிமேகலை, அவள் மறைவிற்கு பின் தெய்வமாகப் போற்றப்பட்டாள்.

3 ) சீவக சிந்தாமணி

சீவக சிந்தாமணி, சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி என்னும் ஐம்பெருங்காப்பியங்களுள் சீவக சிந்தாமணி காலத்தால் முதன்மையானதாகும். வடமொழியில் உள்ள சீவகன் கதைகள் பலவற்றைப் பின்பற்றித் தமிழில் பாடப்பட்டது இந்நூல். இதற்கு முதல் நூல் “க்ஷத்திர சூடாமணி” என்பர். இக்காப்பியத் தலைவன் பெயர் சீவகன் ஆகும். சிந்தாமணி என்பது தேவலோகத்தில் உள்ள ஒரு மணியாகும். அது கற்பகத்தரு மற்றும் காமதேனு போன்று கேட்டதைத் தரும் இயல்புடையதாகும். அதனால்தான் ‘சீவகனுடைய கதையைக் கூறும் சிந்தாமணி போன்ற காப்பியம்’ என்ற பொருளில் இதற்குச் சீவக சிந்தாமணி எனப் பெயரிட்டார் இக்காப்பியத்தின் ஆசிரியர் திருத்தக்கதேவர். சீவக சிந்தாமணி மொத்தம் 3145 பாடல்களைக் கொண்டது. பதின்மூன்று இலம்பகங்களையுடையது. இலம்பகம் என்பதற்கு மாலை என்பது பொருளாகும். அத்தியாயம் என்றும் சொல்லலாம். அதாவது உட்பிரிவுக்குத் திருத்தக்கத்தேவர் வைத்த பெயர் இலம்பகம் ஆகும். முத்தி இலம்பகம் தவிர ஏனையவை மகளிர் பெயரையே பெற்றுள்ளன. பெரும்பாலான இலம்பகங்களில் மணநிகழ்ச்சி கூறப்பட்டுள்ளது. சீவகன் எட்டு பெண்களை மணக்கின்ற நிகழ்ச்சி எட்டு இலம்பகங்களில் கூறப்பட்டுள்ளது. எனவே தான் இக்காப்பியத்திற்கு ‘மணநூல்’ என்ற பெயரும் உண்டு. பதிகத்தில் காப்பியத்தின் கதைச் சுருக்கம் கூறப்பட்டுள்ளது.

  • இக்காப்பியத்தை இயற்றிய திருத்தக்கதேவர் சமண முனிவராவார். இவர் திருத்தகு முனிவர் என்றும், திருத்தகு மகா முனிவர் என்று அழைக்கப் பெறுவார். இவர் சைன ஆசாரியர் சங்கங்களில் ஒன்றாகிய திரமிள சங்கத்து அருங்கலான்வயத்தைச் சேர்ந்தவர் என்பர். இவர் வாழ்ந்த காலமும் இடமும் தெளிவாகத் தெரியவில்லை என்றாலும், இவர் கி.பி. 2ஆம் நூற்றாண்டிற்கும் 7ஆம் நூற்றாண்டிற்கும் இடைப்பட்ட காலத்தைச் சேர்ந்தவராக இருக்கலாம் என வரலாற்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். திருத்தக்கதேவர் சோழர் குடியில் பிறந்தவர். இளமையிலேயே கல்வி கேள்விகளில் சிறந்த விளங்கியவர். வடமொழிப் பயிற்சி மிக்கவர். காமம், பொய், கொலை, கள், சூதாடல் என்ற ஐவகைத் தீமையும் அகற்றியவர். சமணத் துறவியாக வாழ்ந்தவர். விருத்தமெனும் பாடல்களைக் கொண்டு பெருங்காப்பியம் பாடியவர்களில் இவர் முதன்மையானவர்.
  • ஒரு சமயம் திருத்தக்கதேவர் மதுரை சென்றிருந்தபோது, அங்கிருந்த புலவர்கள், சமண சமயத்தவர் துறவறம் பற்றிப் பாட இயலுமே ஒழிய அகப்பொருட் சுவை மிக்க இன்பத்துறைப் பாடல்களைப் பாட இயலாது என்று இகழ்ந்துரைத்தனர். இதனால் மனவருத்தமுற்றை இவர் தம் ஆசிரியரிடம் இதுபற்றி கூறினார். இவரின் திறமையை உலகுக்கு உணர்த்த விரும்பிய ஆசிரியர், அப்பொழுது குறுக்கே ஓடிய நரி ஒன்றைப் பற்றி ஒரு நூல் இயற்றுமாறு கூறினார். அப்போதே ஆசிரியர் போற்றும் வண்ணம், செல்வ நிலையாமை, யாக்கை நிலையாமை பற்றிக் கூறும் ‘நரி விருத்தம்’ என்னும் அற்புதமான ஒரு சிறு நூலை இயற்றினார். திருத்தக்கதேவரின் கற்பனைத் திறனைக் கண்டு வியந்த ஆசிரியர் சீவகன் வரலாற்றை அகப்பொருள் சுவை மிளிர பெருங்காப்பியமாக பாடுமாறு கட்டளையிட்டார். அதோடு ‘செம்பொன்வரைமேல்’ என்ற ஒரு பாடலை எழுதி அவரிடம் கொடுத்து, அதனையே கடவுள் வாழ்த்தாகக் கொண்டு நூலைத் தொடங்குமாறு கூறினார். ஆசிரியர் பாடிய அப்பாடலோடு திருத்தக்கதேவரும், ‘மூவா முதலா’ எனத் தொடங்கும் சித்தரைத் துதிக்கும் பாடல் ஒன்றைப் பாடினார். ஆசிரியர் தாம் பாடிய பாடலைவிட தம் மாணவர் பாடிய பாடல் சிறப்பாக இருப்பது கண்டு, திருத்தக்கதேவரின் பாடலை முதலாகவும், தம் பாடலை இரண்டாவதாகவும் வைக்கும்படி கூறினார். அதனால் தான் இக்காப்பியத்தில் சித்தர் வணக்கம் முதலாவதாகவும், அருகர் வணக்கம் இரண்டாவதாகவும் உள்ளது. திருத்தக்க தேவர் இக்காப்பியத்தை எட்டே நாட்களில் பாடி அருளியதாகக் கூறுவர்.
  • பாண்டியன் அவையிலே திருத்தக்கதேவர் தமது நூலை அரங்கேற்றினார். காப்பியத்தின் நடை, அழகு, அமைப்பு, ஒன்பது சுவைகள் ஆகியவற்றைக் கண்டு புலவர்கள் பலர் வியந்து பாராட்டினர். ஆனால் சில அழுக்காறு கொண்ட புலவர்கள், இன்ப சுவை கொண்ட பாடல்களைப் பாட வேண்டுமாயின் இவருக்கு நல்ல முன் அனுபவம் இருந்திருக்க வேண்டும் என்று கூறினார்கள். இது கேட்ட திருத்தக்கதேவர் கையிலே நெருப்பை ஏந்தி தமது அகத் தூய்மையை அனைவரும் அறியச் செய்தார்.
  • பின்வந்த கம்பர் போன்ற பெரும் புலவர்களுக்குச் சீவக சிந்தாமணி கலங்கரை விளக்கமாகத் திகழ்ந்தது என்றால் மிகையாகாது.

4 ) வளையாபதி

வளையாபதியின் ஆசிரியர் பெயர், இயற்றப் பட்ட காலம், அக்காவியத் தலைவன் பெயர், காவியத்தின் கதை போன்றவை தெரியவில்லை. இக்காவியத்தின் 72 பாடல்கள் தான் கிடைத்துள்ளன. அவற்றில் 66 பாடல்கள் 14-ஆம் நூற்றாண்டில் தோன்றிய புறத்திரட்டிலும், 3 பாடல்கள் சிலம்பின் அடியார்க்கு நல்லார் உரையில் மேற்கோளாகவும், 2 பாடல்கள் யாப்பருங்கலக்காரிகை என்னும் இலக்கண நூலின் பெயர்தெரியாத ஓர் அறிஞரால் இயற்றப்பட்ட விருத்தியுரையில் மேற்கோளாகவும், இளம்பூரணரின் தொல்காப்பிய உரையில் மேற்கோளாக் காணப்படுவதும் கடவுள் வாழ்த்துப் பாடலென்று கருதப்படுவதுமாகிய எஞ்சிய 1 பாடல் நச்சினார்க்கினியர் உரையில் மேற்கோளாகவும் கிடைத்துள்ளன. இது ஒரு சமண சமய நூல்.

  • புகார் நகரில் நவகோடி நாராயணன் என்னும் செல்வச் செழிப்புமிக்க வணிகன் இருந்தான். அவன் சைவ சமயத்தவன். அவனுக்கு இரண்டு மனைவியர். முதல் மனைவி அவன் குலத்தைச் சார்ந்தவள். இரண்டாம் மனைவி வேறு குலத்தைச் சார்ந்தவள். அவன் வேற்றுச் சாதிப் பெண்ணை மணந்ததை எதிர்த்து அவன் குலத்தவர்கள் அவனைச் சாதியைவிட்டு ஒதுக்கி வைப்பதாக அச்சுறுத்தவே அவன் தன் இரண்டாம் மனைவியை விட்டுப் பிரிந்தான். அவன் பிறிந்த சமயத்தில் அப் பெண் கருவுற்றிருந்தாள். பின்னர் அவன் கடற்பயணத்தை மேற்கொண்டு பெரும்பொருள் ஈட்டித் திரும்பித் தன் முதல் மனைவியுடன் இன்பமாக வாழ்ந்து வந்தான். இரண்டாம் மனைவி தன் துன்பம் தீர காளி தேவியை வழிபட்டு வந்தாள். சில மாதம் கழித்து அவள் ஒரு மகனைப் பெற்றெடுத்தாள். அவனை நன் முறையில் வளர்த்து வந்தாள். அச்சிறுவனுடைய விளையாட்டு தோழர்கள் அவனைத் தகப்பன் பெயர் தெரியாதவனென்று எள்ளித் துன்புறுத்தவே, அச்சிறுவன் அதுபற்றி தன் தாயிடம் முறையிட்டான். அவள் ஒருவழியாக அவன் தந்தையின் பெயரை அவனுக்குத் தெரிவித்தாள். அது கேட்ட அவன் தன் தந்தையைத் தேடிச் சென்று தன்னை மகனாக ஏற்றுக்கொள்ளுமாறு வேண்டினான். ஆயினும் ஊர்க் கட்டுப்பாட்டைக் கருத்தில் கொண்டு நவகோடி நாராயணன் அவனை ஏற்றுக் கொள்ள மறுத்துவிடுகிறான். பின்னர் அவன் தாய் காளியின் உதவியால் செட்டிச்சாதிப் பெரியவர்களிடம் தன் கற்பின் உண்மையை நிலைநாட்டுகிறாள். நாராயணனும் அவனைத் தன் மகனாக ஏற்று அவனுக்கு வீரவாணிபன் எனப் பெயரிட்டு, அவர்களுடன் இனிது வாழ்ந்தான்.
  • இவ்வாறு இக் காப்பியத்தின் கதை கூறப்பட்டாலும், இந்நூல் சமண சமயக் கருத்துக்களையும் கூறுவதால், சமண நூலில் காளியைப் பற்றிய செய்திகள் இடம் பெற வாய்ப்புகள் இல்லை என்றே எண்ணத் தோன்றுகிறது. இந்நூலின் செய்யுட்கள் முழுமையாக கிடைக்கப் பெறாததால் இதுபற்றி அறுதியிட்டுக் கூற இயலவில்லை.

5 ) குண்டலகேசி

இந் நூலின் நாயகி குண்டலகேசி செல்வச் செழிப்புமிக்க வணிகர் குலத்தில் பிறந்தவள். அவள் பெற்றோர் இட்ட பெயர் பத்தா தீசா. அவள் பருவமடைந்து இனிது இருந்த சமயத்தில் அவ்வூரில் சத்துவான் என்பவன் வழிப்பறிக் கொள்ளை அடித்து, அரசனால் கொலைகளத்துக்கு அனுப்பப்பட்டான். அப்போது அவனைச் சாளரத்தின் வழியே கண்டு, அவள் அவன் மீது காதல் கொண்டாள். அது அறிந்த அவள் தந்தை அரசனுக்கு பொருள் தந்து அக்கள்வனை மீட்டு அவளுக்கு மணமுடித்து வைத்தார். இருவரும் சிலகாலம் இனிது வாழ்ந்த பின்னர், அவனுக்கு மனைவியின் நகைகளை கொள்ளை அடிக்கும் எண்ணம் வரவே, அவளைத் தனியே அருகில் இருந்த சேரர் மலை உச்சிக்கு அழைத்துச் சென்றான். அவன் நடத்தையில் சந்தேகம் கொண்ட பத்தா அது பற்றி கேட்க, அவன் நகைகளைப் பறித்துக் கொண்டு அவளை மலையுச்சியிலிருந்து தள்ளிவிட இருப்பதைக் கூறினான். அது கேட்ட அவள் சாவதற்கு முன் கடைசியாக அவனை ஒருமுறை சுற்றி வந்து வணங்கவிரும்புவதாகக் கூறி அவனை அம் மலை உச்சியிலிருந்து தள்ளி விட்டாள். பின்னர் அவள் சமண மதத்தை தழுவினாள். அவள் தலைக் கூந்தல் பனங்கருக்கு மட்டையால் மழிக்கப்பட்டது. பின்னர் வளர்ந்த அவள் முடி வளைந்து குண்டலம் போக் காட்சி யளித்ததால் குண்டலகேசி என வழங்கப்பட்டாள். அவள் பல இடங்களில் வாதம் புரிந்து, கடைசியில் புத்தரிடம் ஞானத் தெளிவு பெற்று பௌத்தத் துறவியானாள்.

  • இக் காப்பியத்தில் தற்சமயம் 19 பாடல்களே கிடைக்கப் பெற்றுள்ளன. இந் நூல் பௌத்த சமயத்தைச் சார்ந்தது. இந்நூலாசிரியர் நாதகுத்தனார் ஆவர். இந்நூலின் காலம் கி.பி. 7 ஆம் நூற்றாண்டு ஆகும். இந்நூலுக்கு குண்டலகேசி விருத்தம் என்கிற பெயரும் உண்டு.

முடிவுரை:

  • ஐம்பெரும் காப்பியங்களும் தமிழ் இலக்கியத்தின் சிறப்பான சின்னங்கள் ஆகும். இவை அறக் கருத்துக்களைப் போதித்து மக்களை நல்வழிப்படுத்த வழியாக திகழ்கின்றன.
  • ஐம்பெருங் காப்பியங்கள் கூறும் அறக் கருத்துக்களைப் பின்பற்றி அதன் படி நாமும் வாழ்ந்து வாழ்வில் வளம் பெறுவோமாக.
Share This Article
Exit mobile version