அதிமுக தலைமையில் அமைக்கப்பட்ட பாஜக கூட்டணி தொடர்கிறது

Selvasanshi 4 Views
2 Min Read

2021 சட்டமன்ற தேர்தலுக்காக அஇஅதிமுக தலைமையில் அமைக்கப்பட்ட கூட்டணி தொடர்கிறது என அதிமுக தலைமை அறிவித்திருக்கிறது. இது தொடர்பாக ஒருங்கிணைப்பாளரும் ஓ.பன்னீர்செல்வம் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தலின்போது புரட்சித்தலைவி ஜெயலலிதாவின் பொற்கால ஆட்சி தொடர வேண்டும் என்பதற்காக அதிமுக தலைமையில் வலுவான கூட்டணி அமைக்கப்பட்டது என்றும் மக்கள் தொண்டில் ஆர்வம் கொண்ட பல்வேறு இயக்கங்களும் அமைப்புகளும் இந்த கூட்டணிக்கு ஆதரவு அளித்தனர் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

தொடர்ந்து 10 ஆண்டு காலம் ஆட்சியில் இருந்த அதிமுக தமிழ் நாட்டின் வளர்ச்சிக்காகவும் மக்களின் எதிர்காலம் சிறக்கவும் எண்ணற்ற பணிகளை ஆற்றியது என குறிப்பிட்டுள்ள அவர்கள் வாக்காளர்கள் அளித்த ஆதரவால் அதிமுக கூட்டணியில் 75 உறுப்பினர்கள் வெற்றிபெற்று சட்டமன்றத்தில் இடம் பெற்று இருக்கிறார்கள் என கூறியுள்ளனர். வெறும் 3 சதவிகித வாக்கு வித்தியாசத்தில்தான் வெற்றி வாய்ப்பை இழந்தோம் எனக் கூறியுள்ள அதிமுக தலைமை மிக குறைந்த வாக்கு வித்தியாசத்தில் ஆட்சியை இழந்து இருந்தாலும் மக்களின் பேரன்பு அதிமுகவிற்கு தொடர்கிறது என கூறியுள்ளது.

தேர்தல் முடிவுகள் சற்று சோர்வையும், மன சோர்வையும் ஏற்படுத்தி இருந்தாலும் கொண்ட கொள்கையாலும் புரட்சித்தலைவர் எம்ஜிஆர், புரட்சித்தலைவி ஜெயலலிதா ஆகியோர் மீது தொண்டர்கள் கொண்ட விசுவாசத்தாலும் கட்சியின் பொது வாழ்வு எனும் புனித பயணம் வீர நடை போடுகிறது என அதிமுக தலைமை நம்பிக்கை தெரிவித்துள்ளது. ஆற்ற வேண்டிய பணிகள் ஏராளமாக அணிவகுத்து நிற்பதாகவும் அரசியல் வாழ்வு என்பது இடைநிற்றல் இல்லாத லட்சிய பயணம் என்றும் கூறியுள்ள அதிமுக தலைமை இலக்கை அடையும் வரை வீரனுக்கு ஓய்வும், சோர்வும் இருக்கக்கூடாது என அறிவுறுத்தியுள்ளது.

அதிமுக தொண்டர்களுக்கு இதயத்தின் தசை எல்லாம் புரட்சித்தலைவர் எம்ஜிஆரின் அரசியல் பாடமும் புரட்சித்தலைவி ஜெயலலிதாவின் முகம் மட்டுமே தெரியும் என ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக் காட்டியுள்ளனர். புரட்சித்தலைவியின் பொற்கால அரசை மீண்டும் அமைப்பதும் எதிரிகளால் இருள் சூழ்ந்திருக்கும் தமிழ்நாட்டை ஒளிமயமான பூவுலகிற்கு மீண்டும் இட்டுச் செல்வது மட்டுமே இலக்கு என்றும் வேறு எந்த சிந்தனையும் மனதில் ஏற்பட்ட தேவையில்லை என்றும் அதிமுக தலைமைக்கழகம் தெளிவுபடுத்தியுள்ளது.

அதிமுக தலைமையில் 2021 சட்டமன்ற தேர்தலுக்கு அமைக்கப்பட்ட கூட்டணி தொடர்கிறது என்றும் ஒருவருக்கொருவர் உறுதுணையாய் இருந்து தமிழ் நாட்டின் உயர்வுக்கு உழைப்போம் என்றும் அதிமுக தலைமை உறுதிபட கூறியுள்ளது.

Share This Article
Exit mobile version