கொரோனா காரணமாக பிளஸ்-2 பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டு, மாணவர்களுக்கு கடந்த கல்வி ஆண்டுகளில் எடுக்கப்பட்ட மதிப்பெண்களை வைத்து பிளஸ் 2 தேர்வு முடிவு கடந்த 19 ஆம் தேதி வெளியிடப்பட்டது.
இந்த தேர்வு முடிவுகளில் பெற்ற மதிப்பெண் குறைவாக உள்ளதாகக் கருதும் மாணவர்களுக்கும், பள்ளி அளவில் தேர்வு எழுதாத தனித்தேர்வர்களுக்கும் ஆகஸ்டு மாதம் தேர்வு நடத்தப்பட உள்ளது. இதற்கான விண்ணப்ப பதிவு இன்று தொடங்கியுள்ளது.
மாணவர்கள் விண்ணப்பம் பதிவு செய்யும் போது, கட்டாயம் தங்களுக்குரிய அனைத்துப் பாடத் தேர்வுகளையும் எழுதுவதற்கு விண்ணப்பிக்க வேண்டும். மாணவர்கள் குறிப்பிட்ட ஓரிரு பாடத் தேர்வுகளை மட்டும் எழுத விண்ணப்பிக்க முடியாது. மேலும் வரும் ஆகஸ்ட் மாதம் தேர்வர்கள் எழுதவுள்ள தேர்வில் பெறப்படும் மதிப்பெண்களே இறுதியானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மே 2021 பிளஸ்-2 பொதுத் தேர்வு எழுத விண்ணப்பித்த தனித்தேர்வர்கள், தற்போது மீண்டும் விண்ணப்பிக்க தேவையில்லை.
இன்று முதல் 27.07.2021 வரையிலான தேதிகளில் விண்ணப்பிக்கத் தவறும் தேர்வர்கள், 28.07.2021 அன்று ஆன்லைனில் சிறப்பு அனுமதித் தக்கல் திட்டத்தின் மூலம் ரூ.1000 அனுமதிக் கட்டணத்துடன் விண்ணப்பிக்க வேண்டும்.
அரசுத் தேர்வுத் துறை சேவை மையங்கள் மற்றும் தனித்தேர்வர்களுக்கான அறிவுரைகள் கல்வி மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள அரசுத் தேர்வுத் துறை சேவை மையங்களின் விவரங்கள், ஆன்லைனில் விண்ணப்பங்களை பதிவு செய்யும் தனித்தேர்வர்களுக்கான தகுதி மற்றும் அறிவுரைகள் ஆகியவற்றை http://www.dge.tn.gov.in/ என்ற இணையதளத்தில் விண்ணப்பதாரர்கள் தெரிந்து கொள்ளலாம்.
பிளஸ் 2 துணைத் தேர்வுகள் ஆகஸ்ட் 6-ம் தேதி முதல் தொடங்க உள்ளதாக அறிவித்துள்ள அரசுத் தேர்வுகள் இயக்ககம், அதற்கான தேர்வுக்கால அட்டவணையையும் தற்போது வெளியிட்டுள்ளது.