சென்னையில் உள்ள ‘இன்ஸ்டிடியூட் ஆப் ஆஸ்ட்ரோனேடிக்ஸ் அண்ட் ஏவியேஷன்‘ நிறுவனம், வானியல் தொடர்பான படிப்பை மாணவர்களுக்கு வழங்கி வருகிறது. இந்த நிறுவனத்தின் சார்பில், நாடு முழுதும் பத்து மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு, ரஷ்யா விண்வெளி பயிற்சி மையத்தில் பயிற்சி பெற அனுப்பி வைக்கப் படுகின்றனர். இதற்கு நான்கு கட்டமாக மாணவர்களுக்கு தேர்வுகள் நடத்தப்படுகிறது.
தமிழகத்தில் உள்ள அரசு பள்ளி மாணவர்கள் இந்த தேர்வில் கலந்து கொள்ள வேண்டும் என்று பள்ளி கல்வித்துறை அறிவுறுத்தி இருந்தது. அந்த வகையில் ரஷ்யா விண்வெளி பயிற்சி மையத்தில் பயிற்சி பெற மாணவர்களுக்கு நடைபெற்ற முதற்கட்ட நுழைவுத்தேர்வில் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் தேர்வாகி உள்ளார்கள்.
இந்த விண்வெளி பயிற்சிக்காக நடைபெற்ற முதற்கட்டமாக தேர்வில் 10 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். இதில் சென்னை அரும்பாக்கம் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி மாணவி டி.அருணாவும், மாணவர் எஸ்.சண்முகமும் முதல் இரண்டு இடத்தை பிடித்துள்ளார்கள். பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், இவர்களை பாராட்டி கேடயம் வழங்கினார்.
இது குறித்து அப்பள்ளி தலைமை ஆசிரியர் பிரபுதாஸ் கூறியதாவது, ”கடந்த ஆண்டு எங்கள் பள்ளியில் இருந்து மூன்று மாணவர்கள் மருத்துவக் கல்லுாரியில் சேர்ந்துள்ளனர். ‘இந்தாண்டு ரஷ்யா விண்வெளி பயிற்சி மையத்தில் பயிற்சி பெற நடைபெற்ற முதற்கட்ட தேர்வில் இரண்டு மாணவர்கள் தேர்வு பெற்றுள்ளனர். இது எங்கள் பள்ளிக்கும், ஆசிரியர்களாகிய எங்களுக்கும் பெருமையைத் தருகிறது,” என்கிறார்.
இதற்கு அடுத்தடுத்து நடக்கும் தேர்விலும் நாங்கள் வெற்றி பெற்று ரஷ்யா செல்வோம் என்று மாணவர்கள் நம்பிக்கையுடன் கூறுகிறார்கள்.