தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகமாக இருந்ததால் நியாய விலை கடைகளில் ஏற்படும் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த கைரேகை பதிவு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. கொரோனா பேரிடர் காலத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கொரோனா நிவாரண நிதியாக ரூ.4000 வழங்கப்பட்டது. இந்த நிவாரண தொகை இரண்டு தவணைகளாக ரூ.2000 மே மற்றும் ஜூன் மாதம் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
ரேஷன் கடைகளில் நாளை முதல் கைவிரல் ரேகை பதிவு முறையை மீண்டும் அமல்படுத்த படுவதாக தமிழ்நாடு அரசு அறிவித்து உள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டிருக்கும் அறிக்கையில் கொரோனா நிவாரணத் தொகை மற்றும் 14 மளிகை பொருட்கள் விநியோகத்தை முன்னிட்டு ரேஷன் கடைகளில் கைவிரல் ரேகை பதிவு முறை நிறுத்தப்பட்டு இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இந்த மாத இறுதிக்குள் முழுவதுமாக விநியோகம் முடிக்கப்படும் நிலை உள்ளதால் கைவிரல் ரேகை பதிவு முறை மீண்டும் நாளை முதல் அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய குடும்ப அட்டைக்கு ஒப்புதல் அளிக்கும் சேவையும் நாளை முதல் மீண்டும் தொடங்கப்படும் என தமிழ்நாடு அரசு அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.