சமுதாய மேம்பாட்டிற்காக சேவை செய்து வரும் இளைஞர்கள் முதலமைச்சரின் மாநில இளைஞர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அழைப்பு விடுத்துள்ளது.
இது குறித்து தர்மபுரி மாவட்ட ஆட்சியர் திவ்யதர்ஷினி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘சமுதாய வளர்ச்சிக்காக சேவையாற்றும் இளைஞர்களின் பணியை அங்கீகரிக்கும் வகையில், முதலமைச்சர் மாநில இளைஞர் விருது ஆண்டுதோறும் சுதந்திர தின விழாவின் போது வழங்கப்படுகிறது.
இந்த விருது 15 வயது முதல் 35 வயது வரை உள்ள 3 ஆண்களுக்கும், 3 பெண்களுக்கும் வழங்கப்படுகிறது. இந்த விருதுடன் 50 ஆயிரம் ரூபாய் ரொக்கம் மற்றும் பாராட்டுப் பத்திரமும் வழங்கப்படும்.
நடப்பு ஆண்டுக்கான முதலமைச்சர் மாநில இளைஞர் விருது, 2021ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி நடக்கும் சுதந்திர தின விழாவில் முதலமைச்சரால் நேரடியாக வழங்கப்பட உள்ளது. இந்த விருதுக்கு விண்ணப்பிக்கும் ஆண் மற்றும் பெண்களுக்கு 1.4.2021ஆம் தேதியன்று 15 வயது நிரம்பி இருக்க வேண்டும். அல்லது இவர்களுக்கு 31.3.2021 தேதி அன்று 35 வயதுக்குள் இருக்க வேண்டும்.
இந்த ஆண்டுக்கான விருதுக்கு 1.4.2020 முதல் 31.3.2021 வரை மேற்கொள்ளப்பட்ட சேவைகள் மட்டுமே பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படும்.
இளைஞர்கள் இந்த விருதுக்கு விண்ணப்பிக்கும் முன் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் தமிழ்நாட்டில் வசித்திருக்க வேண்டும். இதற்கான ஆதாரங்களையும் விண்ணப்பத்துடன் சமர்ப்பிக்க வேண்டும்.
மேலும் இவர்கள் சமுதாய நலன்களுக்காக பணியாற்றி இருக்க வேண்டும். இந்த விருதுக்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் இணையதளம் www.sdat.tn.gov.in மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். இந்த விருதுக்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்க ஜூன் 30-ஆம் தேதி கடைசி நாளாகும்.’ என்று கூறப்பட்டுள்ளது.