தமிழ் எழுத்தாளர்களை ஊக்குவித்து சிறப்பிக்கும் வகையில் இலக்கிய மாமணி விருது உருவாக்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்து இருக்கிறது.
இயல், இசை, நாடகத்தில் சிறந்து விளங்கும் கலைஞர்களுக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் ‘கலைமாமணி விருது’ வழங்கப்பட்டு வருகிறது. அதேபோல், தமிழ் எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் வகையில் ‘இலக்கிய மாமணி’ என்ற விருது உருவாக்கப்பட்டு, தமிழ் இலக்கியத்திற்கு வளம் சேர்க்கும் எழுத்தாளர்களில் மூவரை தேர்வு செய்து ஆண்டுதோறும் இந்த விருது வழங்கப்படும் என்றும் அரசு அறிவித்துள்ளது.
மேலும் இவ்விருதாளர்களுக்கு பாராட்டுப் பத்திரம் மற்றும் ஐந்து லட்சம் ரூபாய் ரொக்க பரிசும் வழங்கப்படும் என்றும் தெரிவித்து இருக்கிறது.
தமிழ்நாட்டைச் சேர்ந்த எழுத்தாளர்களில் ஞானபீடம், சாகித்ய அகாடமி போன்ற தேசிய மற்றும் மாநில இலக்கிய விருதுகள், புகழ்பெற்ற உலகளாவிய அமைப்புகளின் விருதுகள் பெற்ற எழுத்தாளர்கள், கவிஞர்களை ஊக்குவிக்கும் வகையில் அவர்கள் வசிக்கும் அல்லது விரும்பும் மாவட்டத்தில் கனவு இல்லம் வழங்கப்படும் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.