நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்து வருகிறது. கொரோனா தொற்று தீவிரத்தை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. தற்போது உள்ள முழு ஊரடங்கு காரணமாக தொற்றின் வேகம் சற்று குறைந்துள்ளது. மேலும் தொற்றின் வேகத்தை கட்டுப்படுத்த நாடு முழுவதும் 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. மேலும் தற்போது 18 வயது முதல் 44 வயது வரை உள்ளவர்களுக்கும் தடுப்பூசி செலுத்து பணி தொடங்கிப்பட்டு உள்ளது.
இந்நிலையில் சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் அத்தியாவசியப் பணிகளில் ஈடுப்பட்டுள்ள 18-44 வயதினருக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்று தெரிவித்து இருக்கிறார்.
தடுப்பூசி குறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கை:
கொரோனா நோய் தொற்று தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, மாநிலம் முழுவதும் ஏற்கனவே 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி விலையில்லாமல் செலுத்தப்பட்டு வருகிறது.
சென்னை மாநகராட்சியின் சார்பில் அமைக்கப்படவுள்ள தடுப்பூசி சிறப்பு முகாம்களில் அத்தியாவசியப் பணிகள் மேற்கொள்ளும் 18 வயதிற்கு மேற்பட்ட நபர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் தற்பொழுது கொரோனா தடுப்பூசி விலையில்லாமல் செலுத்தப்பட உள்ளது.
அந்தவகையில், நாள்தோறும் செய்தித்தாள்கள் விநியோகம் செய்பவர்கள், பால் விநியோகிப்பவர்கள், ஆட்டோ, கார், பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள், உள்ளாட்சித்துறை பணியாளர்கள், அனைத்து அரசு பணியாளர்கள், மின்துறை பணியாளர்கள், கட்டிடத் தொழிலாளர்கள், தெருவோர வியாபாரிகள், மருந்தகங்கள் மற்றும் மளிகை கடைகளின் பணியாளர்கள், அத்தியாவசியப் பணிகளுக்கான தொழிற்சாலைகள் மற்றும் மின்னணு வர்த்தகப் பணியாளர்கள் ஆகியோர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதில் முன்னுரிமை வழங்கப்படும்.
மாநில போக்குவரத்து ஊழியர்கள், பள்ளி மற்றும் கல்லூரி ஆசியர்கள், கப்பல் மற்றும் விமானப் போக்குவரத்து பணியாளர்கள், கொரோனா பாதிப்பு மிக அதிக உள்ள பகுதிகளில் பொதுமக்களுக்கு சேவை புரியும் தன்னார்வலர்கள் ஆகியோர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் தங்கள் பகுதிக்குட்பட்ட தடுப்பூசி சிறப்பு முகாம்களில் கொரோனா தடுப்பூசிகளை பெற்று பயனடையலாம் என்று கூறப்பட்டுள்ளது.
மேலே குறிப்பிட்டுள்ள நபர்கள் தடுப்பூசி செலுத்துவதில் முன்னுரிமை பெற சம்பந்தப்பட்ட மாநகராட்சி தலைமையிடத்தில் வருமானம் மற்றும் நிதித்துறை துணை ஆணையர் அவர்களின் அலுவலகத்திற்கு சென்று விவரங்களை வழங்கலாம். அல்லது மாநகராட்சியின் https://forms.gle/Bb5VGvRxUXuvmEvi8 என்ற இணையதளத்தின் வாயிலாக அல்லது 94983 46494 என்ற வாட்ஸ்அப் எண்ணில் தங்களுடைய விவரங்களை பதிவு செய்யலாம். இவ்வாறு பதிவு செய்வபவர்களுக்கும், தகவல் அளிப்பவர்களுக்கும் மாநகராட்சியின் சார்பில் தடுப்பூசி செலுத்த சிறப்பு முகாம்கள் அமைக்கப்படும்.
இவ்வாறு பதிவு செய்து தடுப்பூசி செலுத்தி கொள்ள வரும் நபர்களுக்கு ஊரடங்கு காலத்தில், தடுப்பூசி முகாம்களுக்கு செல்ல, மாநகராட்சியின் தடையில்லா சான்று வழங்கப்படும். தடையில்லா சான்று பெற நிறுவனங்களின் அங்கீகார அட்டை மற்றும் நிறுவன சீருடை அணிந்து செல்ல வேண்டும் என்று சென்னை மாநகராட்சி ஆணையாளர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்து இருக்கிறார்.