தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் நேற்று(திங்கள் கிழமை) முதல் ஒரு வாரத்திற்கு தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. முழு ஊரடங்கு காலத்தில் மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் எந்த விதமான தடையும் இன்றி கிடைக்க முதலமைச்சர் ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்தினர்.
சென்னையில் உள்ள தலைமை செயலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் சென்னை மாநகராட்சி ஆணையர் சுகன்தீப் சிங் பேடி, வேளாண் துறை அமைச்சர் பன்னீர்செல்வம், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், தலைமைச் செயலாளர் இறையன்பு, தோட்டக்கலை துறை IAS ஆகியோர் கலந்து கொண்டனர்.
கொரோனா பேரிடர் காலத்தில் மக்கள் கட்டுப்பாடுகளை மீறாத வகையில் மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களான பால், காய்கறி மற்றும் பழங்கள் போன்றவற்றை விநியோகம் செய்ய வேண்டும் என்று அதிகாரிகளுக்கு முதல்வர் அறிவுறுத்தினார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பன்னீர்செல்வம், தமிழகம் முழுவதும் 13,000 வாகனங்கள் மூலம் காய்கறிகள் விற்பனை நடைபெற்று வருவதாகவும், நேற்று ஒரே நாளில் 4,900 மெட்ரிக் டன் காய்கறி, பழங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார்.