ஹைலைட்ஸ்:
- சட்டமன்றத் தேர்தலில் திமுக தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுள்ளது.
- தமிழகத்தில் புதிய முதல்வராக பதவியேற்க மு.க.ஸ்டாலினுக்கு முறைப்படி ஆளுநர் பன்வாரில் லால் புரோகித் அழைப்பு.
- மே 7ஆம் தேதி மு.க.ஸ்டாலின் தமிழக முதல்வராக பதவியேற்க உள்ளார்.
தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுள்ளது. இதனால் அக்கட்சியின் சார்பில் தலைவர் மு.க. ஸ்டாலின் சட்ட மன்ற தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதைத்தொடர்ந்து அவர் தமிழகத்தில் ஆட்சி செய்ய ஆளுநரிடம் உரிமை கோரினார்.
மு.க. ஸ்டாலின் இன்று (மே 5)காலை 10 மணிக்கு ஆளுநர் மாளிகை சென்று ஆளுநர் பன்வாரிலாலை சந்தித்தார். அப்போது 133 எம்எல்ஏக்களின் ஆதரவு கடிதத்தை வழங்கி உரிமை கோரினார்.
இதை தொடர்ந்து தமிழகத்தில் புதிய முதல்வராக பதவியேற்க மு.க.ஸ்டாலினுக்கு முறைப்படி ஆளுநர் பன்வாரில் லால் புரோகித் அழைப்பு விடுத்துள்ளார். ஆளுநர் அழைப்பு கடிதத்தை அவரது செயலாளர் அனந்தராம் பட்டேல் மு.க.ஸ்டாலினிடம் வழங்கி உள்ளார்.
இதனையடுத்து மு.க.ஸ்டாலின் வரும் மே 7ஆம் தேதி தமிழக முதல்வராக பதவியேற்க உள்ளார். இதற்கான அழைப்பிதழை தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன் வெளியிட்டுள்ளார்.
தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன் வெளியிட்ட அழைப்பிதழில், ‘மே 7 ஆம் தேதி காலை 9 மணியளவில் சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை பதவியேற்பு விழா நடைபெறும், அழைப்பிதழுடன் வர வேண்டும்’ எனக் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. மே 7ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10.30 மணி முதல் 12 மணி வரை ராகுகாலம். அதனால் காலை 9மணிக்கே அமைச்சரவை பதவியேற்பதாக கூறப்படுகிறது.