ஹைலைட்ஸ்:
- மே, ஜூன் ஆகிய இரண்டு மாதங்களுக்கு தலா 5 கிலோ இலவச தானியங்கள்
- 5 கிலோ இலவச உணவு தானியங்களுக்காக மத்திய அரசு 26 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கியது.
- 80 கோடி ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் உணவு தானியங்கள் இலவசம் என மத்திய அரசு அறிவிப்பு
நாடு முழுவதும் இரண்டாம் அலை கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழகம் மற்றும் கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் இரவு நேர ஊரடங்கு பிறப்பித்து உள்ளது. அதேபோல் நேரக்கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.மேலும் உயர்மட்ட குழுவினருடன் ஆலோசனையும் நடத்தி வருகிறார். இந்த ஆலோசனை கூட்டத்தில் மாநில அரசுகள் ஆக்சிஜன் தடையின்றி கிடைக்கிறதா என்பதை உறுதி செய்ய வேண்டும் என்று கூறியிருக்கிறார்.
மாநில முதல்வர்களுடன் நேற்று மீண்டும் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையில் தமிழக அரசு சார்பில் தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் பங்கேற்று இருந்தார். ஆலோசனையின் போது பிரதமர் நரேந்திர மோடி, கரீப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தின் கீழ் மே, ஜூன் மாதங்களில் நாடு முழுவதும் உள்ள 80 கோடி பேருக்கு தலா 5 கிலோ இலவச உணவு தானியங்கள் வழங்கப்படும் என்று கூறினார். இதற்காக மத்திய அரசு 26 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது.
கொரோனா வைரஸ் இரண்டாம் அலை வேகமாக பரவி வருவதால், மாநிலங்களுக்கிடையே சில ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளது. இதனால், ஏழை எளிய மக்கள் உணவு பொருட்கள் இன்றி தவிக்கும் நிலை உருவாகலாம். எனவே ஏழை எளிய மக்கள் பயனடையும் வகையில் தற்போது, தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ், ரேஷன் திட்டத்தின் கீழ், மே மற்றும் ஜூன் ஆகிய இரண்டு மாதங்களுக்கு கூடுதலாக 5 கிலோ அரிசி உள்ளிட்ட உணவு தானியங்கள் இலவசமாக வழங்க முடிவு செய்துள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.