இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட தொடரில், இந்திய அணி 2 க்கு 1 என்ற கணக்கில் வெற்றி பெற்று உள்ளது.
நேற்று புனேவில் நடைபெற்ற 3வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி டாஸ் வென்று, முதலில் பேட்டிங் செய்ய இந்திய அணியை அழைத்தது.
அதன்படி இந்திய அணியின் தொடக்க வீரர்களான ரோகித் சர்மா, தவான் ஆகியோர் களமிறங்கி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள்.
ரோகித் ஷர்மா 37 ரன்கள் எடுத்து ரஷீத் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அரைசதம் அடித்த தவான் 67 ரன்களில் ஆட்டமிழந்தார்.
அடுத்ததாக களமிறங்கிய கேப்டன் கோலி மற்றும் ராகுல் ஆகியோர் 7 ரன்களில் ஆட்டமிழந்தார்கள். இதனால் இந்திய அணி, 157 ரன்களில் 4 விக்கெட்டுகளை இழந்தது.
இதற்கு பிறகு ஜோடி சேர்ந்த, ரிஷப் பந்த் மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோர் அவர்களின் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள்.
மேலும் சிறப்பாக ஆடிய ரிஷப் பந்த் 78 ரன்களிலும், ஹர்திக் பாண்டியா 64 ரன்களிலும் ஆட்டம் இழந்தார்கள். இறுதியாக இந்திய அணி 48.2 ஓவர்களில் 329 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆட்டமிழந்தது.
இங்கிலாந்து அணி 330 ரன்கள் எடுத்தால் வெற்றி என களமிறங்கியது. இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்களான ஜேசன் ராய், ஜானி பேர்ஸ்டோ ஆகியோர் புவனேஷ்வர் குமார் பந்துவீச்சில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தார்கள்.
அடுத்தாக களமிறங்கிய பென் ஸ்டோக்கஸ் 35 ரன்களிலும், கேப்டன் பட்லர் 15 ரன்களிலும் வெளியேறினார்கள். 257 ரன்கள் எடுப்பதற்குள் இங்கிலாந்து அணி 8 விக்கெட்டுகளை இழந்துவிட்டது.
இங்கிலாந்து அணியின் ஆல்ரவுண்டர் சாம் கரண் அவருடைய அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இவர் இந்திய அணியின் பந்துவீச்சை அதிரடியாக எதிர் கொண்டு ரன்களை குவித்தார்.
இறுதி ஓவரில் 14 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சூழலில் இருந்த இங்கிலாந்து அணி 5 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது.
இந்திய அணி இந்த வெற்றியின் மூலம், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டியில் இந்திய அணி 2க்கு 1 என்ற கணக்கில் வெற்றிபெற்றது.
மேலும் இங்கிலாந்து அணியை சேர்ந்த ஆல்ரவுண்டர் சாம் கரணுக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.அதேபோல் ஜானி பேர்ஸ்டோவிற்கு தொடர் நாயகன் விருதும் வழங்கப்பட்டது.
ஒருநாள் தொடரில் 70 சிக்ஸர்கள் புதிய சாதனை
இந்த ஒருநாள் கிரிக்கெட் தொடரில் புதிய சாதனையாக 70 சிக்ஸர்கள் இரு அணியன் பேட்ஸ்மேன்களும் விளாசி உள்ளார்கள். இந்த ஒரு நாள் தொடர் 70 சிக்ஸர்கள் எடுத்து முதலிடத்தில் உள்ளது.
இந்திய அணி வீரர்கள் 33 சிக்ஸர்களும், இங்கிலாந்து அணி வீரர்கள் 37 சிக்ஸர்களும் எடுத்துள்ளார்கள்.
இதற்கு முன் இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான தொடரில் அதிகபட்சமாக 57 சிக்ஸர்கள் விளாசி இந்த தொடர் முதலிடத்தில் இருந்தது. தற்போது இது முறியடிக்கப்பட்டு இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டு உள்ளது.
கடந்த 2017 இல் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற ஒருநாள் தொடரில் 56 சிக்ஸர்கள் விளாசப்பட்டது. இது தற்போது மூன்றாவது இடத்தில் உள்ளது.