தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டு இருந்தது. மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் கொரோனா பரவல் குறைந்த நிலையில் மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டது. 10 மற்றும் 12 ஆகிய வகுப்பு மாணவர்களுக்கு ஜனவரி 19ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டன. பின்னர் 9 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பிப்ரவரி 8 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டன.
கொரோனா பரவல் கட்டுப்பாடுகளுடன் மாணவர்கள் பள்ளிக்கு போதிய சரீர இடைவெளி, முகக்கவசம் ஆகிய முன்னேற்பாடுகள் உடன் பாடங்களை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் 9,10 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்கள் தேர்வுகள் ஏதும் இன்றி தேர்ச்சி பெற்றனர் என்று தமிழக அரசு அறிவித்தது.
அதேசமயம் மீதமுள்ள பாடத்திட்டங்களை நடத்தி முடிக்க மாணவர்கள் கட்டாயம் பள்ளிக்கு வர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. பின்னர் மே 3ஆம் தேதி முதல் மே 21 ஆம் வரை பிளஸ் 2 வகுப்புகளுக்கு மட்டும்
பொதுத்தேர்வு நடத்த தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
ஏப்ரல் 6ஆம் தேதி சட்ட மன்ற தேர்தல் நடைபெற உள்ளது. மே 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
தேர்தலுக்கான பணிகள் பெரும்பாலும் பள்ளிகளில் நடைபெற உள்ளதால் சம்பந்தப்பட்ட பள்ளி வளாகங்கள் தேர்தல் ஆணையத்திடம் ஒப்படைக்கப்பட வேண்டும். பள்ளிக்கல்வித்துறை சட்ட மன்ற தேர்தல் காரணமாக அனைத்து பள்ளிகளுக்கும் வரும் மார்ச் 31ஆம் தேதிக்கு பிறகு கோடை விடுமுறை விட முடிவு செய்துள்ளது.
மார்ச் 22ஆம் தேதி அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் பருவத் தேர்வுகளை நடத்தி முடிக்க அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். தேர்வு முடிந்த பின்னர் அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் கோடை விடுமுறை விடப்படும். சட்ட மன்ற தேர்தலுக்கு பின்னர் 12 ஆம் வகுப்பிற்கும் மட்டும் நேரடி வகுப்புகள் நடத்தப்படவுள்ளது. இதுதொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.