புதியதாக இந்த ஆண்டு 2,000 ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கவில்லை – ரிசர்வ் வங்கி தகவல்!

Selvasanshi 4 Views
2 Min Read

கடந்த நிதியாண்டைப் போலவே, இந்த 2020-21 நிதியாண்டிலும் 2,000 ரூபாய் நோட்டுகள் புதிதாக அச்சடிக்கப்பட வில்லை என்று ரிசர்வ் வங்கி தகவல் தெரிவித்து இருக்கிறது.

கொரோனா காலத்திலும் ரிசர்வ் வங்கி 2020-21-ஆம் ஆண்டுக்கான வருடாந்திர அறிக்கையை நேற்று வெளியிட்டு உள்ளது. இந்த அறிக்கையில் கடந்த நிதியாண்டைப் போலவே, இந்த 2020 – 2021 நிதியாண்டிலும் 2,000 ரூபாய் நோட்டுகள் புதிதாக அச்சடிக்கப்படவில்லை.

இரண்டு வருடங்களுக்கு முன்பாகவே புதிய 2000 ரூபாய் நோட்டுகளை அச்சிடும் பணியை ரிசர்வ் வங்கி நிறுத்திவிட்டது. ஏனெனில் இதுவரை கணக்கெடுத்த மொத்த மதிப்பீட்டின் அடிப்படையில், 2020 மார்ச் 31 நிலவரப்படி, ரூ.500, ரூ.2,000 நோட்டுகளில் 83.4% புழக்கத்தில் இருந்தது. இது, 2021 மார்ச்சில் 85.7 சதவீதமாக அதிகரித்துள்ளது.

பணமதிப்பு அடிப்படையில், மார்ச் 2020 ஆம் ஆண்டு 5.48 லட்சம் கோடியாக இருந்த 2,000 நோட்டு புழக்கம், மார்ச் 2021ஆம் ஆண்டில் 4.9 லட்சம் கோடியாக சரிந்து இருக்கிறது. எக்காரணத்துக்காக 2000 ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்பட்டு வருகிறது என்ற தகவல் ஏதும் இதுவரை உறுதி செய்யவில்லை.

இந்த ஆண்டு 500 ரூபாய் நோட்டு புழக்கம் 31.1 சதவீதமாக உயர்ந்துள்ளது. இது 2020 ஆண்டு மார்ச் மாதத்தில் 25.4 % ஆகவும், 2018-19 நிதியாண்டில் 19.8 % ஆகவும் இருந்தது. புழக்கத்தில் உள்ள 500 நோட்டுகளின் எண்ணிக்கை 3,867.9 கோடியாக இருக்கிறது. இது மதிப்பு அடிப்படையில் 19.34 லட்சம் கோடியாக இருக்கிறது.

தற்போது 20 ரூபாய் தாள்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. 2019-20 நிதியாண்டில் 13,390 லட்சம் 20 ரூபாய் தாள்கள் புழக்கத்தில் இருந்தது. தற்போது புழக்கத்தில் உள்ள 20 ரூபாய் தாள்களின் எண்ணிக்கை 38,250 லட்சமமாக அதிகரித்துள்ளது.

இந்திய பொருளாதாரத்தில் கொரோனா இரண்டாம் அலை, முதல் அலையின் போது ஏற்பட்ட பாதிப்பை போல் பெரும் பாதிப்பை ஏற்படுத்தவில்லை என்றும், தற்போது பொருளாதாரத்தில் நிச்சயமற்ற நிலை நீடிக்கிறது என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

Share This Article
Exit mobile version